மணவாட்டியைத் தெரிந்துகொள்ளுதல் Los Angeles, California USA 65-0429E 1வியாதிப்பட்டோர் அநேகர் உள்ளனர். அவர்கள் அனைவரிடத்திலும் ஒரே நேரத்தில் என்னால் செல்ல முடியாது. மறுபடியுமாக இந்த அழகான அரங்கத்தில், இந்த அருமையான ஜனத்தாரின் மத்தியில் இன்று நான் இருப்பதைக் குறித்து நிச்சயம் மகிழ்ச்சியடைகிறேன். சில நிமிடங்களுக்கு முன்பு நாங்கள் உள்ளே வந்தோம் - ஜனங்கள் தெருவில் நின்று கொண்டு, அவர்களால் உள்ளே வர முடியவில்லை என்று கூறினர். நான், “சரி, ஒருக்கால் நான் உங்களுக்கு சிறிது இடம் ஒழுங்கு செய்யக்கூடும்'' என்றேன். ஆனால் அவர்களோ அவர்களை உள்ளே விட மறுத்தனர். அவர்களை உள்ளே அனுமதிக்க எங்களுக்குப் போதிய இடம் இல்லாததால் வருந்துகிறோம். அடித்தளமும் ஜனங்களால் நிறைந்துள்ளது என்று அவர்கள் கூறினர். அதைக் குறித்து நாங்கள் வருந்துகிறோம். இங்கு குழுமியுள்ள அருமையான போதகர்களையும், வர்த்தகர்களையும், தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளையும் காண்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. 2இன்று காலை, காலை உணவின் போது பேசும் சிலாக்கியம் எனக்கு கிடைத்தது. இத்தகைய அருமையான மக்களிடையே பேசுவதை மேன்மையாக கருதுகிறேன். அப்பொழுது நான் 'பதர் கோதுமையுடன் சுதந்தரவாளியாயிருப்பதில்லை' என்னும் பொருளின் பேரில் பேசினேன். என்னால் அதை முடிக்க முடியவில்லை. அது சகோதரனின் தவறல்ல. நாங்கள் இன்னும் சிறிது நேரம் தங்கியிருக்க அவர் நிர்வாகத்தினரிடம் அனுமதி கேட்டார். அவரோ மறுத்துவிட்டார். சகோ. டீமாஸ், அதை நிச்சயம் பாராட்டுகிறேன். அது மிக, மிக அருமையான செயல். நீங்கள் ஒவ்வொருவரும் பாராட்டும் தயைக்காக உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் எங்களுக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்ட காரணத்தால், அதை நிறுத்திவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. வேறொரு சமயம் அதை எடுத்துக் கொண்டு, முடித்துவிடுகின்றேன். பதர் கோதுமையுடன் சுதந்தரவாளியாயிருப்பதில்லை. நீங்கள் அதை புரிந்து கொண்டீர்களா? அங்கு வந்திருந்தவர்கள்? புரிந்து கொள்வதற்கு அதில் போதிய அளவு இருந்தது என்று நினைக்கிறேன். 3இன்றிரவு ஒரு குழு (Panel) உள்ளதென்று நானறிவேன் (சகோ. பிரான்ஹாம் முழு சுவிசேஷ வர்த்தகரால் ஒழுங்கு செய்யப்பட்ட பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்த கேள்வி - பதில் குழுவைக் குறிப்பிடுகின்றார். இச்செய்தி பிரசங்கிப்பட்ட போது, அந்த நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சலிஸில் தொலைக் காட்சியில் காண்பிக்கப்பட்ட - ஆசி) நீங்கள் அதைக் காணத்தவறக் கூடாது என்பதற்காக, உங்களை இங்கு அதிக நேரம். நான் வைத்திருக்க விரும்பவில்லை. அது பெந்தேகொஸ்தே விசுவாசிகளுக்கு நன்மை பயத்தது என்று நினைக்கிறேன் - அன்றிரவு நாம் கண்ட அந்த நிகழ்ச்சி, நான் மிக்க மகிழ்ச்சி கொண்டேன். இன்றிரவு காண்பிக்கப்படவிருக்கும் அந்த நிகழ்ச்சியையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாரென நம்புகிறேன் அதை காண்பவர் எவரும் விசுவாசிப்பார்களாக. அதுவே என் ஊக்கமான ஜெபம். 4இன்று கடிதங்களின் மூலமாகவும் தொலைபேசிகளின் மூலமாகவும் அநேக தகவல்கள் வந்துள்ளன. இக்கூட்டத்தில் அநேகர் சுகம் பெற்றனர் என்று அதைக் குறித்து நான் மகிழ்ச்சி கொண்டேன். ஜனங்கள் வியாதிப்பட்டிருப்பதை காணும் போது... அது ஒருவகையான என் ஊழியம். பிரசங்கம் செய்வதற்காக இந்த என் கென்டக்கி இலக்கணத்துடன் நான் எழுதியிருக்கிறேன். (நான் பிரசங்கியல்ல. நீங்கள் அறிவீர்கள்) கென்டக்கி மொழியில் உபயோகிக்கும் சொற்களை நான் உபயோகிக்கிறேன். இன்று நவீன பிரசங்கி என்று நாம் அழைப்பவர் அவ்வாறு செய்வதில்லை. அந்த ஸ்தானத்தை நான் வகிக்க முடியாது. ஏனெனில் எனக்கு கல்வி கிடையாது. அனால் எனக்கு தெரிந்ததை நான் மற்றவர்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறேன். எனக்கு என்ன தெரியும் என்று நான் உணர்ந்திருக்கிறோனோ, அதை மற்றவர்களுக்கு எடுத்து கூற வேண்டுமெனும் விருப்பம் எனக்குள்ளது நான் எவ்வாறு அதை கற்றுக் கொண்டேன் என்றும், அவர் எனக்கு எவ்வாறாக இருக்கிறார் என்பதைக் குறித்தும். அவரே என் ஜீவன் அனைத்தும் - நான் எதிர்பார்க்கக் கூடியதும், நான் நினைத்திருந்ததைக் காட்டிலும் அதிகமாகவும்... நான் சிறுவனாயிருந்த போது, எனக்கு ஒரு நண்பன் கூட இருந்ததில்லை. ஆனால் இன்று சிறந்த நண்பர்களைப் பெற்றுள்ளதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். (ஒலி பெருக்கியைக் குறித்த உரையாடல் - ஆசி) 5இப்பொழுது ஆராதனைக்கு நேரடியாக சென்று, வேத பாகத்தை வாசிக்க வேதாகமத்தை திருப்புவோம். வேதாகமத்தை படிக்க எனக்கு எப்பொழுதுமே விருப்பம். ஏனெனில் அது தேவனுடைய வார்த்தை. அதை நான் விசுவாசிக்கிறேன். அது தேவனுடைய தவறாத வார்த்தை என்று நான் விசுவாசிக்கிறேன். சில வசனங்களை இங்கு நான் குறித்து வைத்திருக்கிறேன். சில குறிப்புகளையும் எழுதி வைத்திருக்கிறேன். இவைகளை ஆதாரமாகக் கொண்டு சிறிது நேரம் பேச விரும்புகிறேன். ஏறக்குறைய நாற்பத்தைந்து நிமிடங்கள். பிறகு இன்றிரவு காண்பிக்கப்படும் அந்த அற்புதமான நிகழ்ச்சியை மறுபடியும் காண நாம் நேரத்தோடே செல்வோம். தேவன் தொடர்ந்து உங்களை ஆசீர்வதிப்பாரென நம்புகிறேன். நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியும். நானும் கூட இன்றிரவு டூசானுக்கு காரோட்டி செல்ல வேண்டும். அது எவ்வளவு கடினம் என்று நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். அது பத்து மணி நேரம் காரில் பயணம். நான் வெளிநாட்டிற்கு செல்லவிருக்கிறேன். நாளை காலை அரசாங்கத்தில் மஞ்சள் வியாதிக்காக நான் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவே நான் அங்கு சென்றே ஆகவேண்டும். அன்றொரு நாள் அதை நான் தள்ளிப்போட நேர்ந்தது. மறுபடியும் தள்ளிப்போட அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். நான் டெடனஸ், டைபாய்டு வியாதிகளுக்கு தடுப்பு ஊசியும், வேறு ஊசிகளும் போட்டுக் கொள்ள வேண்டும். 6எனவே, இந்த தருணத்துக்காகவும், இந்த கன்வென்ஷனுக்கு முன்பு நடைபெற்ற அந்த அருமையான கூட்டத்துக்காகவும் நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அது என் இருதயத்தை சிலிர்க்க வைத்தது. நீங்கள் அருமையான கூட்டத்தார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாரென நம்புகிறேன். அந்த மகத்தான நேரம்... அந்த பயங்கரமான மிருகம் (Monster) சில நாட்களுக்கு முன்பு அலாஸ்காவில் தோன்றினது. இன்று காலை வாஷிங்டனை சுற்றி அது தன் வாலை விரிக்கக்கூடும். அது எளிதில் இந்தப் பக்கம் வரக்கூடும். பரிசுத்த ஆவி திட்டவட்டமாக எனக்குத் தெரியப்படுத்தினால்... (சகோ. பிரான்ஹாம் அலாஸ்காவில் நேர்ந்த நில நடுக்கத்தைக் குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்). உங்களில் சிலர், “சகோ. பிரான்ஹாமே, அது இங்கு நேரிடுமா?'' என்று கேட்டீர்கள். அதைக் குறித்து எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியவே தெரியாது. எனக்குத் தெரியும் வரைக்கும்... அது உண்மை. உங்களிடம் எப்பொழுதுமே உண்மையாயிருக்க விரும்புகிறேன். ஏதோ ஒன்றை ஊகித்தா, அல்லது ஏதோ ஒரு கருத்தை எடுத்துக் கொண்டோம். இப்படி நம்புகிறேன் என்று கூறப் போவதில்லை. உங்களிடம் எடுத்துரைப்பேன். பூமி முழுவதுமே நிலநடுக்கம் ஏற்படும் நிலையில் உள்ளது. நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். நான் எப்பொழுதும் முயன்று வந்துள்ளேன்... 7இன்று காலை சகோ. ஷகரியான் என்னிடம், அவர் எவ்வாறு ஜெப வரிசைகளின் வழியாக சென்று, ஜனங்கள் மேடைக்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய ஜெப அட்டைகளில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதைப் படித்து, அவர்கள் ஜெப அட்டைகளில் எழுதினதையே நான் கூறினேனா என்று ஒப்பிட்டுப் பார்த்ததாக கூறிக் கொண்டிருந்தார். அவர்கள் ஜெப அட்டைக்ளில் என்னவெல்லாமோ எழுதுகின்றனர். அது சரியாயுள்ளதா என்று அவர் பரிசோதித்து பார்த்தார். அவர் அவ்வாறு பரிசோதித்த நூற்றுக் கணக்கானவைகளில், ஒன்றாகிலும் தவறாயிருக்க முடியாது. பாருங்கள், ஏனெனில் அது... அது தேவனாயுள்ள வரைக்கும். அதில் என்னை நான் மிகைப்படுத்திக் கொண்டால், அது தொடக்கத்திலேயே தவறாகிவிடும். இங்கு அமர்ந்து என்னைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒருவருடைய சிறு மகள் அண்மையில் என்னிடம் வந்தாள். அவள் ஒரு சொப்பனம் கண்டாள். அவள், ''சகோ. பிரான்ஹாமே, இந்த சொப்பனத்தின் அர்த்தம் என்ன?'' என்று கேட்டாள். நான் ''சகோதரியே, எனக்குத் தெரியாது. அதன் அர்த்தத்தை கர்த்தர் என்னிடம் உரைப்பாரா என்று நான் பார்க்க வேண்டும்'' என்றேன். நான் கர்த்தரைக் கேட்ட போது, அவர் என்னிடம் கூறவேயில்லை. அந்த பெண் மறுபடியும் என்னிடத்தில் வந்து, “சொப்பனத்தின் அர்த்தத்தைக் கூறுங்கள்'' என்றாள். நான் “தேனே, இங்கு வந்து உட்காரு. உன் பெற்றோர் எனக்கு நெருங்கிய நண்பர்கள். உன் தந்தை ஓய்வு பெற்ற பின்பு, அவர்கள் கனடாவிலிருந்து புறப்பட்டு வந்து, இங்கு என்னுடன் தங்குகின்றனர். நான் கூறுவதை அவர்கள் விசுவாசிக்கின்றனர். என் வாழ்க்கையில் நான் வேண்டுமென்று தவறான ஒன்றை யாரிடத்திலும் கூறினதில்லை. அந்த சொப்பனத்தின் அர்த்தம் எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். ஆயினும் நானே அந்த சொப்பனத்தை தரிசனத்தில் கண்டு அதன் அர்த்தத்தை அவர் என்னிடம் கூறும் வரைக்கும், நான் உன்னிடம் கூறமுடியாது. நானே ஏதோ ஒன்றை கற்பனை செய்து உன்னிடம் கூறமுடியாது. நானே ஏதோ ஒன்றை கற்பனை செய்து உன்னிடம் கூறுவேனானால், ஜீவனுக்கும் மரணத்துக்கும் இடையே ஒருக்கால் நான் உனக்கு அவசியப்பட்டால், அப்பொழுது நான் கூறுவதை நம்பலாமா வேண்டாமா என்று சந்தேகிக்கும் நிலை ஏற்பட்டு விடும்” என்றேன். 8கர்த்தருடைய நாமத்தில் நான் ஒன்றை உங்களிடம் கூறினால் அது உண்மையாக... அவர் தான் அதை என்னிடம் கூறியிருப்பார். இதுவரைக்கும், இத்தனை ஆண்டு காலமாக, உலகம் முழுவதிலும் அது ஒருமுறையாவது தவறாக இருந்ததில்லை ஏனெனில்... ஒரு மனிதன் அவ்வளவு பிழையற்றவனாக இருக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். அதை தேவனுடைய ஆவி மாத்திரமே செய்ய முடியும். என்னிடம் ஒரு செய்தியுண்டு, அதற்கு நான் உத்திரவாதமுள்ளவனாயிருக்கிறேன். அநேக முறை, நான் ஒரு பயங்கரமான மனிதன் என்றும், எனக்கு ஜனங்கள் என்றால் பிரியமில்லை என்றும், அவர்களை எப்பொழுதும் குற்றப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்றும் ஜனங்கள் என்னைக் கருதியுள்ளனர் (சற்று உட்கார்ந்து, ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்காத யாராகிலும் ஒருவர்) அது உண்மையல்ல நான் ஜனங்களை நேசிக்கிறேன். ஆனால் அன்பு திருத்தும் தன்மை வாய்ந்தது என்பது உங்களுக்குத் தெரியும். 9உங்கள் சிறிய மகன் தெருவில் உட்கார்ந்து கொண்டிருந்தால், நீங்கள், “சிறுவனே, நீ அங்கு உட்காரக் கூடாது'' என்று சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கார்கள் அவனை கடந்து வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. நீங்கள் அவனை உள்ளே கொண்டு வருகிறீர்கள். அவன் மறுபடியும் வெளியே ஓடிவிடுகின்றான். அவனை நீங்கள் திருத்த வேண்டும். அவன் மேல் உங்களுக்கு அன்பு இருந்தால். அவனைத் திருத்துவீர்கள். நீங்கள் அதை செய்ய வேண்டுமானால்... ஒரு மனிதன் ஒரு சிறு படகில் ஆற்றில் மிதந்து நீர் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதை கண்டு, அந்த படகு நீர் வீழ்ச்சியை அடைந்தால் அது மூழ்கிவிடும் என்று நீங்கள் அறிந்திருப்பீர்களானால், நீங்கள் அவனிடம், “ஜான், நீ சற்று சிந்திக்க வேண்டும் உன்னால் அதை கடக்க முடியாது” என்றா கூறுவீர்கள்? அவனால் கடக்க முடியாது என்று நான் அறிந்திருந்தால், என்னால் முடிந்தால் அவனைக் குலுக்கி படகிலிருந்து வெளியே தூக்கிவிடுவேன். ஏனெனில் அன்பு தான் அப்படி செய்யத் தூண்டுகிறது. 10நான் பிரசங்கிக்கும் இந்த செய்திகளில், ஒரு உபதேசத்தையும் (Doctrine) நான் நுழைக்க முயல்வதில்லை. அதையே நான் என் சொந்த சபையில் செய்கிறேன். ஆனால் வெவ்வேறு ஸ்தாபனங்களை சேர்ந்தவர்களும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்ட மனிதரும் ஸ்திரீகளும் கூடியிருக்கும் போது, நான் பொதுவாக பேசி அதை விளக்க முயல்கிறேன். ஆனால் நீங்கள் தேவனுடைய ஆவியால் பிறந்திருந்தால், அதன் உள்ளான அர்த்தத்தையறிந்து கொள்ள அது போதுமானதாயிருக்கும். கிறிஸ்துவ மனிதர்களாகிய மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள் போன்றவர்களாகிய நீங்கள், நான் கூறுவதன் அர்த்தத்தை புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன். 11இன்றிரவு நான் ஆதியாகமம் 24-ம் அதிகரத்துக்கு திருப்பி 12 வசனம் தொடங்கி படிக்க விரும்புகிறேன். ''என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப் பண்ணி என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும். இதோ, நான் இந்தத் தண்ணீர் துரவண்டையிலே நிற்கிறேன். இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப் புறப்பட்டு வருவார்களே. நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்க வேண்டும் என்று நான் சொல்லும் போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும் படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான். ஆதி. 24:12-14 12பிறகு வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தில்... அதியாகமம் வேதாகமத்தின் முதலாம் புஸ்தகம். வேதாகமத்தின் கடைசி புஸ்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷம் 21-ம் அதிகாரம் 9-ம் வசனத்தைப் படிக்க விரும்புகிறேன். ஆதியாகமத்தில் கூறப்பட்டுள்ள இந்த வேத வசனங்கள் உங்களுக்குத் தெரியும்... விருப்பமிருந்தால், அந்த முழு அதிகாரத்தையும் படியுங்கள். அது தேவன் எலியேசரை அனுப்புவதாகும். அல்ல (மன்னிக்கவும்), ஆபிரகாம் எலியேசரை ஈசாக்குக்குப் பெண்ணை தெரிந்து கொள்ள அனுப்புவதாகும். அந்த அழகான ரெபேக்காள் வெளியே வந்தாள். அது ஆபிரகாமின் ஊழியக்காரனாகிய எலியேசர் அப்பொழுது செய்த ஜெபத்துக்கு ஒரு பூரண பதிலாக அமைந்தது. இப்பொழுது வெளிப்படுத்தல் 21-ம் அதிகாரம் 9-ம் வசனம். ''பின்பு, கடைசியான ஏழுவாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து, நீ இங்கே வா, ஆட்டுக் குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி வெளி. 21:9. 13இன்றிரவு பேசுவதற்காக, “மணவாட்டியைத் தெரிந்து கொள்ளுதல்” என்னும் பொருளை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். இது... இங்கு ஒலிபதிவு செய்யும் என் சகோதரன் இந்த ஒலிநாடாவை நீங்கள் வெளியே அனுப்பலாம். இங்குள்ள சபையோருக்கு மாத்திரம் இச்செய்தியை அளிக்கிறேன் என்பதல்ல, இந்த ஒலிநாடாக்கள் உலகம் முழுவதும் செல்கின்றன. அவை ஏறக்குறை - அநேக மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகின்றன. உலகிலுள்ள அஞ்ஞான நாடுகளின் மொழிகளிலும் கூட, நாங்கள் எங்கள் சபையின் சங்கத்தின் (Society) பேரில் இந்த ஒலி நாடாக்களை இலவசமாக அனுப்புகிறோம். அவை ஆப்பிரிக்காவிலுள்ள காடுகளிலும் இந்தியாவிலும் மொழிப் பெயர்க்கப்படுகின்றன். இந்த ஒலி நாடாக்கள் உலகெங்கிலும் செல்கின்றன். இப்பொழுது, மணவாட்டியைத் தெரிந்து கொள்ளுதல் 14வாழ்க்கையின் அநேக காரியங்களில், நமக்கு தெரிந்தெடுக்க தருணம் அளிக்கப்படுகின்றது. வாழ்க்கையின் வழியே தெரிந்தெடுத்தலாகும். நமது சொந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளவோ, அல்லது நாம் வாழ விரும்பும் வழியை தெரிந்து கொள்ளவோ நமக்குரிமையுண்டு. கல்வியும் ஒரு தெரிந்து கொள்ளுதலே. நாம் கல்வி கற்க வேண்டுமா இல்லையா என்று நாம் தெரிந்து கொள்ளலாம். அது நமக்களிக்கப்பட்டுள்ள உரிமை அவ்வாறே தவறையோ சரியானதையோ நாம் தெரிந்து கொள்கிறோம். ஒவ்வொரு மனிதனும், ஸ்திரீயும், பையனும், பெண்ணும், அவர்கள் சரியான முறையில் வாழப் போகின்றனரா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளுகின்றனர். அது தெரிந்து கொள்ளுதல் தெரிந்து கொள்ளுதல் என்பது பெரிய விஷயம். உங்களுடைய நித்தியமே தெரிந்து கொள்ளுதலின் அடிப்படையில் அமைந்துள்ளது. இன்றிரவு ஆராதனை முடிவதற்கு முன்பு, உங்கள் நித்தியத்தை எங்கு கழிப்பீர்கள் என்னும் தீர்மானத்தை நீங்கள் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். ஒரு நேரம் வரும்... நீங்கள் தேவனை அநேக முறை புறக்கணித்தால் நீங்கள் அவரைக் கடைசி முறையாக புறக்கணிக்கும் ஒரு நேரம் வரும். இரக்கத்துக்கும் நியாயத்தீர்ப்புக்கும் இடையே ஒரு கோடு உள்ளது. மரணத்துக்குரிய அந்த கோட்டை கடப்பது எந்த ஒரு மனிதனுக்கும், ஸ்திரீக்கும், பையனுக்கும், பெண்ணுக்கும் ஆபத்தாக அமையும். எனவே முடிவற்ற அந்த நித்தியத்தை எங்கு கழிப்பார்கள் என்னும் தீர்மானத்தை அநேகர் செய்ய வேண்டிய நேரமாக இன்றிரவு அமைந்திருக்கும். 15வாழ்க்கையில் நமக்கு வெறோரு தெரிந்து கொள்ளுதல் உள்ளது. அது வாழ்க்கை துணையைக் குறித்ததாகும். வாழ்க்கையில் பிரவேசிக்கும் ஒரு வாலிபன் அல்லது வாலிபப் பெண்ணுக்கு தன் வாழ்க்கைத் துணையைத் தெரிந்து கொள்ளும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வாலிபன் ஒரு பெண்ணைத் தெரிந்து கொள்ளும் போது, அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ அவளுக்குரிமையுண்டு. அது இருவர் சார்பிலும் தெரிந்து கொள்ளுதலின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கும் தெரிந்து கொள்ளும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் என்னும் முறையில் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். அமெரிக்காவில், நீங்கள் போக விரும்பும் சபையைத் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் எந்த சபையைச் சேர்ந்து கொள்ள வேண்டுமென்று தெரிந்து கொள்ளுதல், அமெரிக்கருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையாகும். அது தெரிந்து கொள்ளுதல் உங்களுக்கு விருப்பமில்லையென்றால். நீங்கள் எந்த சபைக்கும் போக வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் மெதோடிஸ்டு சபையிலிருந்து பாப்டிஸ்டு சபைக்கு அல்லது கத்தோலிக்க சபையிலிருந்து பிராடெஸ்டெண்டு சபைக்கு மாற விரும்பினால், யாரும் ஒன்றும் சொல்ல முடியாது. நீங்கள் குறிப்பிட்ட சபைக்குத் தான் செல்ல வேண்டுமென்று யாரும் உங்களை கட்டாயப்படுத்த முடியாது. அது நம்முடைய சுதந்தரம். அது நம்முடைய ஜனநாயகம். ஒவ்வொரு மனிதனுக்கும், தான் விரும்புவதை தெரிந்துகொள்ள மத உரிமை அளிக்கப்பட்டுள்ளது அது ஒரு பெரிய விஷயம். கூடுமான வரைக்கும் இந்த உரிமையை நாம் நீண்ட காலம் பெற்றிருக்க தேவன் உதவி புரிவாராக. 16உங்களுக்கும் தெரிந்து கொள்ளுதல் உள்ளது. ஒரு சபையை நீங்கள் தெரிந்து கொள்ளும் போது, நீங்கள் அந்த சபையில்... நீங்கள் சபையைத் தேர்ந்தெடுக்கும் போது, அது உங்களை நித்தியத்துக்கு வழி நடத்துமா என்பதைக் குறித்து நீங்கள் உறுதியாய் அறிந்திருக்க வேண்டும். ஸ்தாபனக் கோட்பாடுகளைக் கொண்ட சபையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். உங்களுக்கு கோட்பாடுகள் மாத்திரமே அவசியமென்று நீங்கள் நினைக்கலாம். அல்லது மற்றொரு சபை சிறந்த கோட்பாடுகளைக் கொண்டுள்ளது என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் நீங்கள் தெரிந்து கொள்வதற்கு தேவனுடைய வார்த்தையும் உள்ளது. ஆகவே, இவைகளில் நீங்கள் எதை தெரிந்து கொள்ளுவீர்கள் என்பதை தீர்மானம் செய்ய வேண்டும். தெரிந்து கொள்ளதலின் விஷயத்தில் நம்மிடையே எழுதப்படாத ஒரு பிரமாணம் உள்ளது. ஒரு சமயம் எலியாவுக்கு கர்மேல் பர்வதத்தின் மேல் ஒரு பிரச்சனையான நேரம் வந்தபோது, அங்கு பலப்பரீட்சை உண்டானது. அத்தகைய நேரத்தை இப்பொழுது நாம் அணுகிக் கொண்டிருக்கிறோம். நீங்களும் நானும் கர்மேல் பர்வத அனுபவத்தைப் போன்ற ஒன்றைக் குறித்து இன்றிரவு தீர்மானம் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். வெளிப்படையாகக் கூறினால், அத்தகைய அனுபவம் உலகம் முழுவதும் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் வெகு விரைவில், இவ்விரண்டில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் ஒன்று வரப்போகிறது. 17ஸ்தாபன சபைகளைச் சேர்ந்தவர்களே, இதை நம்புங்கள். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் உங்கள் மேல் இப்பொழுது வந்துள்ளது நீங்கள் உலக சபைகளின் ஆலோசனை சங்கத்திற்குள் செல்ல வேண்டும். இல்லையேல் நீங்கள் ஒருக்காலும் ஸ்தாபனமாக இருக்க முடியாது. நீங்கள் அதை செய்ய வேண்டும். இவ்விரண்டில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுதல் என்பது விரைவில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் கடைசி மணி நேரம் வரை காத்திருத்தல் ஆபத்தானது. ஏனெனில் அதை உதறித் தள்ளிவிட முடியாத அளவுக்கு உங்கள் நிலைமை வந்துவிடும். உங்களை எச்சரிக்கும் நேரம் ஒன்றுள்ளது. ஆனால் எச்சரிப்பின் கோட்டை நீங்கள் கடந்துவிட்டால் மற்ற பக்கத்துக்காக நீங்கள் குறியிடப்படுகிறீர்கள் - சூடு போடப்படுகிறீர்கள். 18யூபிலி ஆண்டின் போது ஆசாரியன் எக்காளம் ஊதிக் சென்று, அடிமைகள் அனைவரும் விடுதலையாகிச் செல்லலாம் என்று அறிவிக்கிறான். ஆனால் அவர்கள் விடுதலையை ஏற்க மறுத்துவிட்டால். அவன் ஆலயத்தின் நிலைக்காலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, ஒரு கம்பியினால் அவன் காது குத்தப்படுகின்றது. அதன் பின்பு அவன் தன் எஜமானை வாழ்நாள் பூராவும் சேவிக்க வேண்டும். அவன் செவிகள் கேட்டன என்பதன் அடையாளமாக அது குத்தப்படுகின்றது. ஏனெனில் விசுவாசம் கேள்வியினால் (ஆங்கிலத்தில் by Hearing) கேட்பதனால், தமிழாக்கியோன்) வருகின்றது. அவன் எக்காள சத்தத்தைக் கேட்ட பின்பும் அதற்கு செவி கொடுக்க மறுத்துவிட்டான். அவ்வாறே அநேக சமயங்களில் ஆண்களும், பெண்களும் தேவனுடைய சத்தியத்தைக் கேட்டு அது உறுதிப்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்ட சத்தியமாக உள்ளதைக் காண்கின்றனர். ஆயினும். அவர்கள் அதற்கு செவிகொடுக்க விரும்புவதில்லை. அதற்கு வேறெதோ காரணம் உண்டு. அவர்கள் சத்தியத்தையும் உண்மைகளையும் சந்திப்பதற்கு பதிலாக, வேறு ஏதோ ஒன்றைத் தெரிந்து கொள்கின்றனர். எனவே அவர்களுடைய செவிகள் சவிசேஷத்திற்கு அடைக்கப்படுகின்றன. அவர்கள் அதை மறுபடியும் கேட்பதற்கு முடிவதில்லை. நான் உங்களுக்கு கூறும் ஆலோசனை என்னவெனில், தேவன் உங்கள் இருதயத்தில் பேசும்போது உடனே செயல்படுங்கள். எலியா அவர்களிடம் இரண்டில் ஒன்றைத் தெரிந்து கொள்ளக் கூறினான். அவர்கள் அதை செய்ய வேண்டும். ''இன்று யாரைச் சேவிக்கப் போகின்றீர்கள் என்று தீர்மானம் செய்யுங்கள். கர்த்தர் தெய்வமானால், அவரைப் பின்பற்றுங்கள், பாகால் தெய்வமாயிருந்தால், அவனைப் பின்பற்றுங்கள்'' (1.இராஜா 18:21). 19இன்று காலை நாம் கற்ற பாடத்தில், இயற்கை காட்சிகள் அனைத்துமே ஆவிக்குரிய காரியங்களுக்கு உதாரணமாகத் திகழ்கின்றன என்று பார்த்தோம் - சூரியனும், இயற்கையும். வேதாகமத்திலிருந்து ஒரு பக்கத்தை நான் படிக்கும் முன்பே, இயற்கை என் வேதாகமாகத் திகழ்ந்தது. அதன் மூலம் நான் தேவனை அறிந்து கொண்டேன். ஏனெனில் வேதாகமம் எல்லாவிடங்களிலும் இயற்கையில் எழுதிவைக்கப்பட்டுள்ளது. அது தேவனுடைய வார்த்தையுடன் ஒத்துப் போகின்றது. இயற்கையில் காணப்படும் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், அதாவது சூரியன் உதயமாகி, கடந்து, அஸ்தமனமாகி மரித்து, மறுபடியும் உதயமாதல், அநேக காரியங்களில் நாம் இயற்கையில் தேவனைக் காண்பித்துக் கொண்டே செல்லலாம். ஆனால் இந்த செய்தியை இப்பொழுது அளிக்க வேண்டுமானால், அதை விட்டு நாம் கடந்து செல்ல வேண்டும். 20இப்பொழுது ஆவிக்குரிய... இயற்கை ஆவிக்குரியவைகளுக்கு உதாரணமாக இருக்குமானால், இவ்வுலகில் ஒருவன் மணமகளைத் தெரிந்து கொள்ளுதல் என்பது, ஆவிக்குரிய காரியத்தில் மணவாட்டியைத் தெரிந்து கொள்ளுதலுக்கு ஒரு அடையாளமாக அமைந்துள்ளது எனலாம். நாம் மனைவியைத் தெரிந்து கொள்ளுதல் என்பது - அதாவது ஒரு மனிதன் அவ்வாறு செய்வது - அது மிகவும் கருத்தாய் செய்யப்பட வேண்டிய விவகாரம்... ஏனெனில் ''மரணம் நம்மை பிரிக்குமளவும்'' என்று ஆணையிடப்படுகின்றது. அந்த ஆணையை நாம் காத்துக் கொள்ளவேண்டும். மரணம் மாத்திரமே உன்னைப் பிரிக்க முடியுமென்று நீ தேவனுடைய சந்நிதியில் ஆணையிடுகின்றாய். நான் நினைக்கிறேன்... எதிர் காலத்தை திட்டமிடும் புத்தி சுவாதீனமுள்ள ஒரு மனிதன், மிகவும் கவனமாக தன் மனைவியைத் தெரிந்து கொள்ள வேண்டியவனாயிருக்கிறான். அந்த விவகாரத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைக் குறித்து மிகவும் ஜாக்கிரதையாயிருங்கள். அவ்வாறே கணவனைத் தெரிந்து கொள்ளும் ஒரு பெண்ணும் - ஒருவரை கணவனாக ஏற்றுக் கொள்ளச் சம்மதிக்கும் ஒரு பெண் - அவள் என்ன செய்கிறாள் என்பதைக் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக இந்த நாட்களில், ஒரு மனிதன் தன் மனைவியைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு நன்கு ஆலோசித்து ஜெபம் செய்ய வேண்டும். 21இன்று விவாகரத்துக்கள் அநேகம் நேரிடுவதற்கு காரணம் விவாகரத்துக்களில் அமெரிக்கா முதன்மை ஸ்தானம் வகிக்கிறது. உலகிலுள்ள மற்ற நாடுகளைக் காட்டிலும், இவ்விஷயத்தில் நாம் முதன்மை ஸ்தானம் வகிக்கிறோம்; கிறிஸ்தவ தேசம் எனக் கருதப்பட்டு, அவ்வாறு அழைக்கப்படும் இந்நாட்டில் தான், மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிக விவாகரத்துக்கள் ஏற்படுகின்றன. என்ன ஒரு நிந்தை - நமது விவகாரத்து நீதிமன்றங்கள். அதற்கு காரணம், மனிதன் தேவனை விட்டு அகன்று சென்றுவிட்டான். ஸ்திரீயும் தேவனை விட்டு சென்றுவிட்டாள் என்பதே என் கருத்து. ஒரு மனிதனோ அல்லது ஒரு ஸ்திரீயோ இந்த விஷயத்தில் அழகான கண்களையும், பலமான தோள்களையும், அல்லது வேறெதாவது உலகப்பிரகாரமான அன்பையும் நோக்கிப் பார்த்து அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக, முதலாவதாக தேவனை நோக்கிப் பார்த்து ஜெபம் செய்து “தேவனே, இது தான் உம்முடைய சித்தமா? என்று கேட்பது நலமாயிருக்கும். 22இன்று ஏமாற்றுதல் அதிகமாக உள்ளதென்று நினைக்கிறேன் - பள்ளிக்கூடத்தில் செய்யப்படுவது போல், காலை நேரத்தில் அண்டை வீடுகளிலுள்ள அநேகம் பிள்ளைகள் என் நண்பர்களின் பிள்ளைகள் என்னிடம் வந்து, ''சகோ. பிரான்ஹாமே, எனக்காக ஜெபிப்பீர்களா?. இன்று எனக்கு பரீட்சை நான் இரவு முழுவதும் படித்தேன். இருந்த போதிலும் பரீட்சையில் தேறுவேன் என்னும் நம்பிக்கையில்லை. எனக்காக ஜெபியுங்கள்“ என்கின்றனர். நான் நினைக்கிறேன் எந்த ஒரு பள்ளி சிறுவனும்... காலையில் மேசையில் பெற்றோர்களுடன் ஆகாரம் உண்ணும் போது, நீங்கள், ''அம்மா, ஜானுக்கு இன்று பரீட்சை. அவனுக்காக நாம் ஜெபிப்போம்“ என்று கூறுவீர்களானால் நலமாயிருக்கும் என்று நினைக்கிறேன். வேறு எந்த வழியையும் நீங்கள் கடைபிடிக்க முயன்றால் - மற்றவனின் விடைத்தாளைப் பார்த்து காப்பியடித்து ஏமாற்றுதல் போன்றவை. நீங்கள் மாத்திரம் இவ்விஷயத்தைக் குறித்து ஜெபம் செய்வீர்களானால் நலமாயிருக்கும். 23நமக்கு விவாகமாக வேண்டிய நேரம் வரும் போது, நாம் சற்று யோசிக்கத் தலைப்பட்டால். நாம் மனைவி அல்லது கணைவனை தெரிந்து கொள்ளும் விஷயத்தில் ஆராய்ந்து பார்க்க முற்பட்டால்... ஒரு மனிதன் இதைக் குறித்து கருத்தாய் ஜெபம் பண்ண வேண்டும். இல்லையெனில் அவன் தன் வாழ்க்கை முழுவதையும் நாசமாக்கிக் கொள்வான். ''மரணம் நம்மை பிரிக்குமளவும்“ என்னும் பிரதிக்ஞை ஞாபகமிருக்கட்டும். அவன் தவறாக தெரிந்து கொள்வதன் மூலம் தன் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்ள முடியும். ஆனால் அவன் தெரிந்தே தவறான தீர்மானம் ஒன்றைச் செய்து, அவனுக்கு மனைவியாயிருக்கத் தகுதியில்லாத ஒரு பெண்ணை மணம் புரிந்து கொண்டால், அது அவனுடைய தவறே. அவ்வாறே ஒரு பெண்ணும். ஒருவன் தனக்குக் கணவனாயிருக்க தகுதியற்றவன் என்று அறிந்த பின்பும், அவனை மணந்து கொண்டால், அது அவளுடைய தவறாகும். எது சரி, எது தவறு என்று தெரிந்த பின்பும் அவ்வாறு செய்தால். எனவே இந்த விவகாரத்தில் நீங்கள் நன்றாக ஜெபம் செய்யாமல் ஈடுபடக் கூடாது. 24ஒரு சபையைத் தெரிந்து கொள்ளும் விஷயத்திலும் இது பொருந்தும். நீங்கள் ஐக்கியம் கொள்ள விரும்பும் சபையைக் குறித்து நன்றாக ஜெபம் செய்ய வேண்டும். சபைகளுக்கு ஆவிகள் உண்டு என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். நான் குற்றம் கண்டுபிடிக்க விரும்பவில்லை. எனக்கு வயதாகிவிட்டதென்று உணருகிறேன். என்றாவது ஒரு நாள் இந்த இடத்தை விட்டு நான் செல்ல வேண்டும். இன்றிரவு அல்லது மற்ற சமயங்களில் நான் கூறுபவைகளுக்கு நியாயத்தீர்ப்பு நாளன்று நான் பதில் கூற வேண்டியவனாயிருக்கிறேன். எனவே நான் மிகவும் கவனமாயும், அது உண்மையென்று நன்கு அறிந்தவனாயும் இருத்தல் அவசியம். நீங்கள் ஒரு சபைக்குச் சென்று அதன் நடத்தையை கவனிப்பீர்களானால் அந்த போதகரை சற்று கவனியுங்கள். வழக்கமாக போதகர் எப்படி நடந்து கொள்ளுகிறாரோ, அப்படியே சபையும் நடந்து கொள்ளும். நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதற்கு பதிலாக ஒருவரின் ஆவியை மற்றொருவர் பெற்றுக் கொள்கின்றோமா என்று சில சமயங்களில் நான் வியந்ததுண்டு. தீவிர கொள்கையுடைய ஒரு போதகர் நடத்தும் ஒரு சபைக்கு நீங்கள் செல்ல நேர்ந்தால் அந்த சபையோரும் அவ்வாறே உள்ளதை நீங்கள் காணலாம். தலையை முன்னும் பின்னும் அசைக்கும் ஒரு போதகரின் சபைக்கு உங்களை நான் கொண்டு சென்றால் அங்குள்ள சபையோரைக் கவனியுங்கள். அவர்களும் அப்படியே செய்வார்கள். எதையுமே அதிவேகமாகச் செய்யும் ஒரு போதகரை எடுத்துக் கொள்ளுங்கள். சபையும் அவ்வாறே செய்யும். எனவே சபையைத் தெரிந்து கொள்ளும் விஷயத்தில் நான் உண்மையான, அடிப்படை தத்துவம் கொண்ட முழு சுவிசேஷ வேதாகம சபையையே தெரிந்து கொள்வேன். என் குடும்பத்தை சேர்க்க ஒரு சபையை நான் தெரிந்து கொள்ள வேண்டுமானால், தெரிந்து கொள்ளுதல்... நான் கவனித்தேன். 25அன்றொரு நாள் இந்த பையன்கள் (சகோ. ஷகரியானின் மகனும் மருமகனும்) ஒரு வாலிபனுக்கு ஜெபம் செய்ய என்னைக் கொண்டு சென்றார்கள். அவன் ஒரு பாடகன், டாம்பீகமான பையன். அவன் பெயர் ஃபிரட் பார்க்கர் (Fred Barker). அவன் சுற்றுப்பயணம் செய்து விட்டு அப்பொழுது தான் திரும்பி வந்திருந்தான். அவர்கள் ஃபிரட் மரித்துக் கொண்டிருக்கிறான் என்று கூறி என்னை அழைத்தார்கள். அவன் வீட்டை நான் அடையும் முன்பே, “அவன் இப்பொழுது மரித்து விட்டிருப்பான்” என்னும் செய்தி கிடைத்தது. அவனுக்கு மூளையில் இரத்தப்பெருக்கு இருந்ததாகவும், அதன் விளைவாக அவன் கைகால் முடங்கிப் போய் மரித்துக் கொண்டிருக்கிறான் என்றும் அவர்கள் கூறினார்கள். அவனுக்காக ஜெபம் செய்ய வேண்டுமென்று அவனுடைய மனைவி கேட்டுக் கொண்டாள். நான் நினைத்தேன், ''நான் விமானத்தில் சென்றால், அங்கு நான் அடையும் முன்பே அவன் மரித்துப் போகலாம், ஒருக்கால் இப்பொழுதே அவன் மரித்திருக்கக் கூடும்'' என்று எனவே நான் உடனே தொலைபேசியில் அவனுடைய மனைவியை கூப்பிட்டு, தொலைபேசியை அவனுடைய காதில் வைக்கும்படி செய்தோம். அவனால் விழுங்க முடியவில்லை. எனவே செயற்கை முறையில் அவனை விழுங்க வைத்தனர். நாங்கள் அவனுக்காக ஜெபம் செய்து முடிந்தவுடன், அதை தொண்டையிலிருந்து எடுத்து விடும்படி அவன் சைகை காட்டினான். அவனால் விழுங்க முடிந்தது. மருத்துவர்கள் அதை நம்பவில்லை. எனினும் அவர்கள் அதை எடுத்துவிட்டனர் அவனால் இயற்கையாக விழுங்க முடிந்தது. அன்று அவன் எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். சபை - சபையைத் தெரிந்து கொள்ளுதல். 26சற்று முன்பு, இன்று காலை என்னுடன் தொலைபேசியில் பேசினார்கள். என் சபையைத் சேர்ந்த ஒரு அம்மாள்; உண்மையில் அவர்கள் லூசிவில்லைச் சேர்ந்த ஒரு பாப்டிஸ்டு ஸ்திரீ அவர்கள் இன்று அதிகாலை மரணமடைந்தார்கள். என் இடத்தில், நான் நடத்தும் சபையைச் சேர்ந்த சபையோர் - தங்களை முற்றிலும் அர்ப்பணித்த சபையிலுள்ள மனிதர் - ஒன்று கூடி, சவ அடக்கம் செய்பவன் சவத்திற்கு தைலமிடும் முன்பு, அந்த சவத்தின் பக்கத்தில் நின்று கொண்டு ஜெபித்தனர். அப்பொழுது அந்த அம்மாளின் உயிர் திரும்ப வந்தது. இன்றிரவு அந்த அம்மாள் உயிரோடிருக்கிறார்கள் - என் சபையின் மூப்பர்கள் ஏன்? எல்லா காரியங்களும் கூடும் என்று விசுவாசிக்கும்படி அவர்கள் கற்பிக்கப்பட்டுள்ளனர். தேவனிடத்தில் உத்தமமாய் வாருங்கள். ஆகவே நீங்கள் சரியான தீர்மானம் செய்ய வேண்டும். 27ஒரு மனிதன் எந்த விதமான பெண்ணைத் தெரிந்து கொள்ளுகிறான் என்பதிலிருந்து, அவனுடைய ஆசை என்னவென்றும், அவனுடைய குணாதிசயங்களும் புலனாகின்றன. ஒருவன் தவறான பெண்ணைத் தெரிந்து கொண்டால், அவன் எப்படிப்பட்ட குணாதிசயங்களை உடையவனாயிருக்கிறான் என்பதை அது பிரதிபலிக்கிறது. அவன் யாருடன் தன்னை இணைத்துக் கொள்ள முயல்கிறான் என்பது அவனுக்குள் உண்மையாக என்ன உள்ளது என்பதைக் காட்டுகிறது. ஒருவன் தெரிந்து கொள்ளும் மனைவி, அவனுக்குள் என்ன உள்ளது என்பதை அது காண்பிக்கின்றது. அவன் வெளியில் என்ன கூறினாலும் அவன் மணம் புரிந்து கொள்ளும் போது அவனைக் கவனியுங்கள். நான் ஒரு மனிதனுடைய அலுவலகத்துக்கு செல்கிறேன். அவன் தன்னை கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொள்கிறான் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் சுவர்களில் அரை நிர்வாணமான பெண்களின் படங்கள் தொங்கவிடப்பட்டு, அங்கு “பூகி-வூகி'' (Booglie - wooglie) இசையும் முழங்கிக் கொண்டிருந்தால் அவன் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை. அவனுடைய சாட்சியை நான் நம்பமாட்டேன். ஏனெனில் அவனுடைய ஆவி உலக காரியங்களினால் போஷிக்கப்படுகின்றது. ஒருவன் ஒரு ''கோரஸ் பெண்ணையோ (Chorus girl) அல்லது செக்ஸ் ராணியையோ, அல்லது அழகான ஒரு நவீன ரிக்கெட்டாவையோ மணந்து கொள்வதாகக் கூறினால், அது அவனுடைய குணாதிசயங்களை பிரதிபலிக்கிறது. அவனுடைய எதிர்கால குடும்பம் எவ்வாறு இருக்க வேண்டுமென்று அவன் தன் மனதில் அவனுடைய குழந்தைகளைப் பெற்று வளர்க்க, அவன் அவளைத் தான். அந்த குழந்தைகளையும் அவள் வளர்ப்பாள். எனவே, ஒரு மனிதனுக்குள் என்ன உள்ளது என்பதை அது பிரதிபலிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பெண்ணைத் தெரிந்து கொள்ளும் ஒரு மனிதன், எதிர்காலத்தைக் குறித்து என்ன நினைத்திருக்கிறான் என்பது வெளிப்படையாகின்றது. ஒரு கிறிஸ்தவன் அப்படிப்பட்ட ஒரு செயலைப் புரிவான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை ஐயா. நான் அப்படி நினைக்கமாட்டேன். உண்மையான கிறிஸ்தவன் எவனும் அழகு ராணிகளையும், கோரஸ் பெண்களையும், செக்ஸ் ராணிகளையும் தெரிந்து கொள்ளமாட்டான். அவன் கிறிஸ்தவ குணாதிசயம் கொண்ட பெண்ணையே தெரிந்து கொள்வான். 28நீங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக அடைய முடியாது. ஓ, பெண் அழகாக இருக்கலாம். மற்றொரு பெண் ஒருக்கால் மற்றவளைக் காட்டிலும் தோற்றத்தில் சிறந்தவளாயிருக்கலாம். நீங்கள் ஏதாகிலும் ஒன்றைத் தியாகம் செய்ய வேண்டும் ஆனால் ஒரு பெண், கனமுள்ள பெண்ணின் தோற்றத்தை கொண்டிராமற்போனால்... அவள் அழகாயிருந்தாலும் இல்லாமற் போனாலும் எனக்கு கவலையில்லை. நீங்கள் அவளுடைய பண்புக் முக்கியத்துவம் கொடுங்கள் - அவள் அழகாயிருந்தாலும் இல்லாமற் போனாலும். இப்பொழுது... ஒரு கிறிஸ்தவன் மனைவியைத் தெரிந்து கொள்ளும் போது, அவன் மறுபடியும் பிறந்த ஒரு பெண்ணையே தெரிந்து கொள்ள வேண்டும். அவள் காண்பதற்கு எப்படியிருந்தாலும் பரவாயில்லை. அவள் என்னவாயிருக்கிறாளோ, அதுதான் அவளுடைய நடத்தை. அது மாத்திரமல்ல, அத்தகைய செயல் அவனுடைய தெய்வீக பண்பைப் பிரதிபலித்து, அவனுடைய சிந்தையில் என்ன உள்ளதென்றும், அவனுடைய குடும்பம் எதிர்காலத்தில் எவ்வாறிருக்கும் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது அந்த பெண் எப்படிப்பட்ட குடும்பத்தை கட்டி வளர்ப்பாள் என்றும், அவனுடைய குடும்பத்தின் எதிர்கால திட்டம் என்னவென்றும். அவன் நவீன ரிக்கெட்டாக்கள், செக்ஸ் ராணிகள் போன்றவர்களில் ஒருத்தியை மணந்தால், அவன் எதை எதிர்பார்க்க முடியும்? வீட்டில் தங்கி குடும்பத்தைப் பேணிப் பாதுகாக்கும் நல்லொழுக்கம் அற்றவளாய், வேறு யாரோ ஒருவருடைய அலுவலகத்தில் பணிபுரியும் ஆவல் கொள்ளும் ஒரு பெண்ணை அவன் மணந்தால், அவள் எத்தகைய வீட்டுப் பணிகளைச் செய்பவளாயிருப்பாள்? நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஆட்களை அமர்த்த வேண்டியிருக்கும். அது உண்மை. 29பெண்கள் பணிபுரியும் இந்த நவீன பழக்கத்தை நான் ஆதரிப்பதில்லை. காவற்படையில் சேர்ந்துள்ள இப்பெண்கள் சீருடை அணிந்து, மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்வதைக் காணும் போது அநேக ஆண்கள் வேலையில்லாமல் இருக்கும் போது, பெண்களை அப்படிப்பட்ட வேலையில் அமர்த்துவது எந்த ஒரு நகரத்துக்கும் அவமானத்தை விளைவிக்கும். நமது நகரம் கொண்டுள்ள நவீன கருத்தை அது எடுத்துக்காட்டுகிறது. அது சீர் குலைந்து வருவதைக் காண்பிக்கின்றது. நாம் பெண்களை அப்படி வெளியில் அனுப்ப வேண்டிய அவசியமில்லை. பெண்கள் அப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபட எந்த உரிமையும் இல்லை. தேவன் மனிதனுக்கு மனைவியைக் கொடுத்த போது, இரட்சிப்புக்கு அடுத்தபடியாக மிகச் சிறந்த ஒன்றை அவனுக்கு கொடுத்தார். ஆனால் ஒரு பெண் ஆணின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள முயன்றால், அது அவன் பெற்றுள்ள மோசமான ஒன்றாகி விடுகிறது. அது உண்மை. அதன் ஆவிக்குரிய பொருத்தத்தை இப்பொழுது நாம் காணலாம். நான் அவ்வாறு கூறுவது நல்லதல்ல என்று நீங்கள் கருதுகின்றீர்கள். அது நல்லதல்ல என்று எனக்குத் தெரியும். ஆனால் அது உண்மை. அது எவ்வளவு தான் நல்லதல்லாமல் இருந்த போதிலும், நாம் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். அப்படித்தான் வேதம் நமக்கு போதிக்கின்றது. 30இந்த விஷயத்தில் தேவன் எவ்வாறு தமது எதிர்கால மணவாட்டியுடன் தமது எதிர்கால குடும்பத்தை திட்டமிடுகிறார் என்னும் ஆவிக்குரிய திட்டத்தை நாம் வெளிப்படையாகக் காணலாம். அது வெளிப்படையாக நமது காட்சியில் தோன்றுகிறது. ஒருவன் வீட்டில் தங்காத செக்ஸ் ராணியை மணந்தால், அவன் தன்னுடைய எதிர்கால வாழ்க்கை எவ்வாறிருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறான் என்பதை நீங்கள் காணலாம். ஒருமுறை நான்... இது மோசமாகத் தென்படும். ஆனால் இதைக் கூற வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது... சாதாரணமாக, ஒன்றைக் கூற வேண்டுமென்று எனக்குத் தோன்றினால், அதை நான் கூறியே ஆகவேண்டும். ஏனெனில் அது தேவனுடைய வழியாகும். நான் வேலை செய்து கொண்டிருந்த மாட்டு பண்ணையாளர் ஒருவருடன் நான் மாடுகள் வாங்கச் செல்வது வழக்கம் அந்த வயோதிபர் ஏலத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு, அந்த இளம் பசுவின் முகத்தை உற்று நோக்குவதை நான் கவனித்திருக்கிறேன். பின்பு அதன் தலையை திருப்பி அவர் முன்னும் பின்னும் பார்ப்பார். நான் கவனித்துக் கொண்டே அவரைப் பின் தொடருவேன். அவர் மேலும் கீழும் பார்ப்பார். அதன் தோற்றம் சரியென்று அவருக்கு மனதில் பட்டால், அதன் முகத்தை உற்று நோக்குவார். சில சமயங்களில், தலையை அசைத்து விட்டு நடந்து சென்றுவிடுவார். நான், “ஜெஃப், உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன்'' என்றேன். அவர், ''கேள் பில்'' என்றார். நான், “நீங்கள் ஏன் அந்த பசுவின் முகத்தை உற்று நோக்குகிறீர்கள்? அது பார்வைக்கு நன்றாகத் தானே உள்ளது!” என்றேன். அதற்கு அவர், ''மகனே, நீ கற்க வேண்டியது அதிகமாயுள்ளது என்று நான் உன்னிடம் கூற விரும்புகிறேன்'' என்றார். அவர் கூறி முடித்த பின்பு, “அது உண்மையென்று உணர்ந்தேன். அது பார்வைக்கு எப்படியிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அதன் முகத்தில் கொடூரமான முறைப்பு இருந்தால், அதை வாங்காதே” என்றார். நான், “ஏன் ஜெஃப்?” என்று கேட்டேன். அவர், “முதலாவதாக அது பண்ணையில் தங்காது. அடுத்தபடியாக, அதன் கன்றுக்கு அது தாயாக இருக்காது'' என்று கூறிவிட்டு ”இப்பொழுது அவர்கள் அதை பட்டியில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான் அது கொழுத்திருக்கிறது கொடூர முறைப்புள்ள அதை அவிழ்த்துவிட்டால், அது தலைதெறிக்க ஓடும்'' என்றார். நான், “நான் ஒன்றைக் கற்றுக் கொண்டேன், தெரியுமா? அது பெண்களுக்குப் பொருந்தும்” என்றேன். அந்த கொடூரமான முறைப்பான ரிக்கெட்டா பார்வை - வாலிபனே, அதை விட்டு விலகிச் செல். அவளுடைய கண்களுக்கு மேல் நீலவர்ணம் - எனக்கு அது அவசியமில்லை. அது கிறிஸ்தவ பெண்ணுக்கு உகந்த ஒன்றல்ல என்பது என் அபிப்பிராயம். தொலைகாட்சியும் செய்தித்தாள்களும், அது அழகையூட்டும் என்று எவ்வளவு தான் விளம்பரம் செய்தபோதிலும், அது என் வாழ்க்கயிைல் நான் கண்டிராத மிகவும் பயங்கரமான, கொடூரமான காட்சியாகும். 31ஒரு நாள் காலை, கிளிப்டன் உணவு விடுதியில் நான் காலை உணவு அருந்திக் கொண்டிருந்த போது, அதை முதன் முறையாகக் கண்டேன். சில வாலிபப் பெண்கள் அங்கு வந்தனர். சகோ. ஆர்கன் பிரைட் என்னுடன் இருந்தார். அவர் கீழே சென்றார். நான் பார்த்த போது, அந்த பெண் வந்தாள். “இது என்னவென்று தெரியவில்லையே” என்று நான் நினைத்தேன். அதை நான் முன்பு கண்டதில்லை. அது ஒரு விதமான ஓ, அவள் முகம் பூச்சியால் அரிக்கப்பட்டது போன்று தோன்றினது. காண்பதற்கு விகாரமாயிருந்தது - இதை நான் கேலியாகக் கூறவில்லை. இதை நான்... நான் குஷ்டரோகம் பிடித்தவர்களைக் கண்டிருக்கிறேன். நான் ஒரு மிஷனரி. நான் எல்லாவித அசாதாரணப் பிறவிகளையும் கண்டிருக்கிறேன். எப்படி வியாதிகள்... நான் அந்த வாலிபப் பெண்ணிடம் சென்று, ''நான் ஒரு போகதர். நான் வியாதியஸ்தருக்கு ஜெபிப்பவன். உனக்கு நான் ஜெபிக்க விரும்புகிறாயா?'' என்று கேட்க நினைத்தேன். அப்படிப்பட்ட ஒன்றை நான் அதுவரை கண்டதில்லை. பின்பு இரண்டு மூன்று பெண்கள் உள்ளே வந்தனர். அப்பொழுது நான் பின்னால் அடி எடுத்து வைத்து காத்திருந்தேன். அப்பொழுது சகோ. ஆர்கன் பிரைட் வந்தார். நான் ''சகோ. ஆர்கன் பிரைட் இந்த பெண்ணுக்கு என்ன நேர்ந்தது?'' என்றேன் (அவர் ஒருக்கால் இங்கிருக்கலாம்). அவர், ''அது வர்ணம்'' என்றார். நான் “என்னே, என்னே'' என்றேன். இந்த வியாதி மற்ற பெண்களிடம் பரவாதபடிக்கு அவளை எங்காவது வியாதியஸ்தர்களை வைக்கும் ஒரு அறையில் அவர்களை அடைத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். 32வாழ்க்கைத் துணையைத் தெரிந்து கொள்ளும் போது, நீங்கள் திட்டமிட்டு கவனித்து, ஜெபம் செய்ய வேண்டும். தேவனுடைய வார்த்தையின்படி, ஒரு மனிதன் தெரிந்து கொள்ளும் ஒரு மணமகள், அவனுடைய பண்புகளை பிரதிபலிக்கிறவளாயிருக்கிறாள். அவனுக்குள் இருப்பது என்னவென்பதை அது பிரதிபலிக்கிறது. பரிசுத்த ஆவியால் நிறைந்த ஒருவன் அப்படிப்பட்ட ஒருத்தியை மனைவியாகக் கொள்வான் என்று நினைக்கிறீர்களா? சகோதரனே, என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருக்கால் நான் விபரீத புத்தியுள்ளவனாயிருக்கலாம். ஆனால் எனக்கு அது புரியவில்லை. பாருங்கள் கவனியுங்கள், அது அவனுக்குள் இருப்பது என்னவென்பதை புலப்படுத்துகிறது. அவனுடைய எதிர்கால குடும்பத்தை அமைக்க அவள் அவனுக்குதவி செய்ய வேண்டும். நாம் இப்பொழுது ஆவிக்குரிய பாகத்துக்கு சற்று மாறி வருவோம், உலகிலுள்ள ஒரு சபை உலகத்தைப் போன்று நடந்து, உலக காரியங்களை எதிர்பார்த்து, அவைகளில் பங்கு கொண்டு, தேவன் பிரமாணங்களையே எழுதி வைக்கவில்லை என்பது போல் அவைகளை பாவித்தால், கிறிஸ்து அப்படிப்பட்ட ஒரு மணவாட்டியை தெரிந்து கொள்ளப் போவதில்லை என்பதை நீங்கள் அறிய வேண்டும். நவீன சபையை அவர் மணவாட்டியாய் கொள்வார் என்று நினைக்கிறீர்களா? என் கர்த்தர் அப்படி செய்யமாட்டார். என்னால் அதை நினைத்து பார்க்க கூட முடியவில்லை. இல்லவே இல்லை. மனிதனும் அவன் மனைவியும் ஒருவரே என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட ஒரு நபருடன் உங்களை இணைத்துக் கொள்வீர்களா? அப்படியானால் உங்கள் பேரில் நான் கொண்டுள்ள விசுவாசம் என்னை ஏமாற்றிவிடும். 33அப்படியிருக்க, அப்படிப்பட்ட ஒன்றுடன் - ஒரு ஸ்தாபனம் வேசியுடன் - தேவன் தம்மை இணைத்துக் கொள்வதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? “தேவ பக்தியின் வேஷத்தை தரித்து, அதன் பெலனை மறுதலிக்கிறவர்கள்'' அவர் ஒருக்காலும் அப்படி செய்யமாட்டார். அவள் அவருடைய பண்புகளை அவளுக்குள் பெற்றிருக்க வேண்டும். உண்மையாகவே மறுபடியும் பிறந்த சபை கிறிஸ்துவுக்குள் இருந்த அதே பண்புகளை பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் கணவனும் மனைவியும் ஒருவரே. இயேசு தேவனுக்குப் பிரியமானவைகளை செய்தாரென்றால் (அவருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து), அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தினார். அவருடைய மணவாட்டியும் அதே விதமான குணத்தை உடையவளாயிருக்க வேண்டும். அவள் எக்காரணத்தைக் கொண்டும் ஒரு ஸ்தாபனமாக இருக்க முடியாது. ஏனெனில் அவள் (ஸ்தாபனம் - தமிழாக்கியோன்) எவ்வளவுதான் ''முடியாது'' என்று சொல்ல முயன்றாலும், அவள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று அவளுக்குக் கட்டளையிடும் எங்கோ உள்ள ஒரு சங்கத்தின் ஆதிக்கத்தில் அவள் இருக்கிறாள். அது அநேகமுறை உண்மையான, வார்த்தைக்கு லட்சக்கணக்கான மைல்கள் தூரம் இருக்கும். 34சபையை நடத்துவதற்கென்று நமக்கு தேவன் விட்டுச் சென்ற உண்மையான தலைவரை விட்டு நாம் விலகியதும் மிகவும் மோசமான ஒரு செயல். அவர் மாகாண போதகர்களை அனுப்பவில்லை. அவர் பேராயர், குருவானவர், கார்டினல், போப்பாண்டவர் போன்றவர்களை அனுப்பவில்லை. சபையை நடத்த அவர் பரிசுத்த ஆவியை சபைக்கு அனுப்பினார். பரிசுத்த ஆவியாகிய அவர் வரும் போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். நான் சொன்ன இவைகளை அவர் வெளிப்படுத்தி, உங்கள் ஞாபகத்திற்கு அவைகளைக் கொண்டு வந்து வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். பரிசுத்த ஆவி அதை செய்ய வேண்டியவராயிருக்கிறார். ஆனால் நவீன சபையோ அதை வெறுக்கின்றது. அவர்களுக்கு அது பிடிக்கவில்லை. அப்படியானால், அவள் எப்படி கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்க முடியும்? இன்றைய மக்கள் நவீன ஸ்தாபனங்களைத் தெரிந்து கொள்கின்றனர். அது என்ன செய்கிறதென்றால், அவர்கள் வார்த்தையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதைப் புலப்படுத்துகின்றது. உங்களைப் புண்படுத்த வேண்டும் என்னும் எண்ணம் எனக்கில்லை. நீங்கள் அதைக் காணத்தக்கதாக உங்களில் போதிய அளவுக்கு ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும். என்பதே என் நோக்கம். 35நான் அநேக தம்பதிகளுக்கு மணம்புரிந்து வைத்திருக்கிறேன். நான் எப்பொழுதும்... அது கிறிஸ்துவையும் மணவாட்டியையும் எனக்கு ஞாபகப்படுத்துகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நான் நடத்தின விவாகங்களில் ஒன்று, என் வாழ்க்கையில் மிகவும் சிறந்த ஒன்றாகத் திகழ்ந்தது. அது அநேக ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு வாலிப போதகராக இருந்த போது. என் சகோதரன் டபிள்யூ. பி.ஏ.யில் (W.P.A) பணி புரிந்து கொண்டிருந்தார். உங்களில் யாருக்காவது அது இன்னமும் ஞாபகத்தில் உள்ளதா இல்லையா என்று எனக்குத் தெரியாது - என் வயதுள்ளவர்களுக்கு. அது அரசு மேற்கொண்ட ஒரு திட்டம் (Project) என் சகோதரன் முப்பது மைல் தொலைவில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர்கள் ஏரிகளை வெட்டினர் தண்ணீரை நஷ்டப்படுத்தாமல் அதை சேமித்து வைக்க. நான் வசித்த ஜெபர்ஸன்வில்லிலிருந்து நூறு மைல் தொலைவில் உள்ள இந்தியானா போலீஸை சேர்ந்த ஒரு பையன் அவருடன் பணி புரிந்து கொண்டிருந்தான். அங்கு ஒரு... அவன் ஒரு நாள் என் சகோதரனிடம், “டாக் (Doc), விவாகம் நடத்த போதகருக்கு செலுத்த வேண்டிய காணிக்கைக்கு போதிய பணம் என்னிடமிருந்தால் நான் விவாகம் செய்துகொள்வேன்'' என்றான். அவன், ”அதற்காக லைசென்ஸ் பெற என்னிடம் போதிய பணம் உள்ளது. ஆனால் போதகருக்குக் கொடுக்கத் தான் பணம் இல்லை'' என்றான். அப்பொழுது டாக் அவனிடம், ''என் சகோதரன் போதகர். அவர் ஒருக்கால் உனக்கு விவாகம் செய்து வைக்கலாம். இதற்கெல்லாம் அவர் பணம் வாங்குவது கிடையாது'' என்றார். அப்பொழுது அவன், ''எனக்கு விவாகம் நடத்தி தருவாரா என்று அவரைக் கேட்பீர்களா?'' என்றான். 36அன்றிரவு என் சகோதரன் இதைக் குறித்து என்னிடம் கேட்டார். நான், ''அவர்கள் ஏற்கெனவே வேறு யாரையும் விவாகம் செய்து கொள்ளாமலிருந்தால், சட்டப்படி எல்லாம் ஒழுங்காக இருந்தால், நான் நடத்தி வைக்கிறேன்'' என்று ஒப்புக் கொண்டேன். அவர்... அவனைக் கேட்பதாகக் கூறினார். நான், “எல்லாம் சரியாயிருந்தால், அவனை இங்கு வரச் சொல்லுங்கள்'' என்றேன். சனிக்கிழமை அந்த பையன் வந்தான். அதை நினைத்துப் பார்க்கும் போது, அது என் வாழ்க்கையில் நடந்த ஒரு விசேஷித்த சம்பவம். அன்று பகல் மழை பெய்து கொண்டிருந்தது. ஒரு பயை ஷெவர்லே கார், அதன் விளக்குகள் 'பேல்' கம்பியைக் கொண்டு (Baling wire) மின்சாரத்துக்காக இணைக்கப்பட்டதாய் அங்கு வந்து நின்றது. என் மனைவியை இழந்த சில நாட்களுக்கு பின்பு இது நடந்தது. நான் இரு சிறிய அறைகளில் தங்கியிருந்தேன். 'டாக்'கும் அப்பொழுது என்னுடன் கூட அவர்களிருவருக்காகவும் காத்துக் கொண்டிருந்தார். அந்த பையன் காரை விட்டு இறங்கினான் காண்பதற்கு அவன் மணமகன் போலவே எனக்குத் தோன்றவில்லை. அப்படி யாருக்குமே தோன்றியிருக்க முடியாதென்று கருதுகிறேன். அக்காலத்தில் ஒன்றரை டாலருக்கு ஒரு நல்ல ஜதை காலணிகள் வாங்க முடியும். அவனோ கிழிந்து போன காலணிகளை அணிந்திருந்தான். அவனுடைய கால் சட்டை 'தொள தொள'வென்றிருந்தது. அவன் மூஞ்சூறு தோலினால் செய்யப்பட்ட 'ஜாக்கெட்' (Mole Skin Jacket) ஒன்றை அணிந்திருந்தான். பழைய காலத்தவராகிய உங்களில் சிலருக்கு அது ஞாபகமிருக்கும். அது சலவை இயந்திரத்தில் போடப்பட்டு, தண்ணீரில் அலசாதது போல் சுருங்கிக் காணப்பட்டு, மூலைகள் கட்டப்பட்டிருந்தன. 37ஒரு சிறிய பெண் கட்டம் போட்ட உடை ஒன்றை அணிந்து காரின் மறு பக்கத்திலிருந்து இறங்கி வந்தாள். எனக்கு தெரியவில்லை. ஒரு முறை அப்படிப்பட்ட துணியை தவறான பெயரால் அழைத்துவிட்டேன். அதன் பெயர் 'ஜிங்காம்' (Gingham) எனவே அது... அதை மறுபடியும் தவறாகக் கூறுகிறேன். நான் எப்பொழுதுமே அதன் பெயரை தவறாக கூறுகிறேன். நான் சொன்னேன்... அவள் காரிலிருந்து இறங்கி வந்தாள். அவர்களிருவரும் படிக்கட்டுகள் ஏறி வந்தனர். அவர்கள் உள்ளே வந்த போது, அந்த ஏழை பெண்... நான் நினைக்கிறேன் அவள்... அவள் அணிந்து கொண்டிருந்ததெல்லாம் ஒரு பாவாடை மாத்திரமே. அவள் காலணிகள் ஒன்றும் அணிந்திருக்கவில்லை. அவள் இந்தியானா போலீஸிலிருந்து நடந்தும், நடுநடுவே காரில் பிரயாணம் செய்தும் வந்தாள். (hitch-hike) அவளுடைய நீண்ட கூந்தல் பின்னப்பட்டு, பின்னால் தொங்கிக் கொண்டிருந்தது காண்பதற்கு மிகவும் சிறிய பெண். நான் அவளிடம், ''விவாகம் செய்துகொள்ள உனக்குப் பெரிய வயதாகி விட்டதா?'' என்று கேட்டேன். அவள், ''ஆம் ஐயா'' என்று பதிலளித்துவிட்டு “என் பெற்றோர் எழுதிக் கொடுத்த அனுமதியை வைத்திருக்கிறேன். நான் லைசென்ஸ் பெற அதை நீதிமன்றத்தில் காண்பிக்க வேண்டும்'' என்றாள். நான், “சரி, இந்த விவாகத்தை நடத்தி வைக்கும் முன்பு உங்களிடம் சற்று பேச விரும்புகிறேன்'' என்றேன். அவர்கள் உட்கார்ந்தனர். அவன் அறையை சுற்றும் முற்றும் பார்த்தான். அவனுடைய தலைமயிர் வளர்ந்து போய், அது வெட்டப்பட வேண்டியதாயிருந்தது. அவன் சுற்றும் முற்றும் அறையைப் பார்த்துக் கொண்டே இருந்த காரணத்தால், நான் சொல்வதை அவன் கவனிக்கவில்லை. நான், “மகனே, நான் சொல்வதை கவனமாகக் கேட்கவேண்டும்'' என்றேன். அவன், ''சரி, ஐயா“ என்றான். நான், “இந்தப் பெண்ணை நீ நேசிக்கிறாயா”? என்று கேட்டேன். அவன், ''ஆம் ஐயா நான் நேசிக்கிறேன்'' என்றான். நான், “அவளை விவாகம் செய்து கொண்ட பின்பு அவளைக் கூட்டிச் செல்ல ஒரு வீடு இருக்கிறதா?” என்றேன். அவன், “ஆம் ஐயா” என்றான். நான், ''சரி, உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன். நீ பி. டபிள்யூ. ஏ.வில் வேலை செய்வதாக கேள்விப்படுகிறேன்'' என்றேன். அவன், “ஆம் ஐயா” என்றான் (வாரத்துக்கு பன்னிரண்டு டாலர் சம்பளம்) நான், ''அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து தர முடியுமென்று நினைக்கிறாயா?“ என்றேன். அவன், “என்னால் முடிந்த அனைத்தும் செய்வேன்'' என்றான். நான், “அது சரி அவனை வெளியாக்கினால்... சகோதரியே அவனுக்கு வேலை போய்விட்டால் நீ என்ன செய்வாய்? உன் தாயிடமும் தந்தையிடமும் ஓடிப்போய் விடுவாயா?'' என்று கேட்டேன். அவள், “இல்லை ஐயா. நான் அவருடன் தங்கியிருப்பேன்” என்றாள். நான் அவனிடம், “ஐயா உனக்கு மூன்று நான்கு பிள்ளைகள் இருந்து அவர்களுக்கு உண்ண உணவு இல்லாமல் உனக்கும் வேலையில்லாமல் இருந்தால் நீ என்ன செய்வாய்? அவளை அனுப்பிவிடுவாயா?'' அவன், “இல்லை, ஐயா நான் கஷ்டப்படுவேன். நாங்கள் எப்படியாவது சமாளிப்போம்'' என்றான். அதைக் கேட்ட போது, நான் சிறியவன் என்னும் உணர்ச்சி ஏற்பட்டது. அவன் அவளை உண்மையாகவே நேசிக்கிறான் என்பதை அறிந்து கொண்டேன். அவர்கள் ஒருவரையொருவர் நேசித்தனர். அவர்களுடைய விவாகத்தை நடத்தி வைத்தேன். 38அவன் அவளை எங்கு கொண்டு சென்றான் என்று வியந்தேன். சில நாட்களாக என் டாக் சகோதரனிடம், ''அது எங்குள்ளது“? என்று கேட்டேன். அவர், “நியூ ஆல்பனிக்குச்செல்” என்றார் (அது எங்களுக்கு கீழேயுள்ள ஒரு சிறு பட்டினம்) அந்த ஆற்றங்கரையில் சிறிது தகரம் இருக்கும். நான் மின்சார வாரியத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது. மற்ற அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு அரட்டை அடித்து சிரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், நான் மட்டும் வண்டியில் ஏறி ஆற்றங்கரைக்கு சென்று ஜெபம் செய்து, முன்பு இரும்புத் தொழில் நடந்து கொண்டிருந்த தகரக் கொட்டகையில் வேதாகமத்தைப் படிப்பது வழக்கம். அங்கு பழைய பெட்டி கார்கள் (Box cars) இருக்கும். இந்த பையன் அவைகளில் ஒன்றை எடுத்து ஒரு கதவை அறுத்து. செய்தித்தாள்களையும் இணைக்கும் டாக்கி பொத்தன்களையும் (Tacky buttons) எடுத்துக்கொண்டு “டாக்கி பொத்தன்கள்” என்றால் என்னவென்று எத்தனை பேருக்குத் தெரியும்? அப்படியானால் கென்டக்கி நாட்டவர் யாரும் இங்கில்லை. ஒரு அட்டைத் துண்டை எடுத்து, அதில் கட்டை விரல் இணைப்பு ஆணியை (Thumbtack) சொருகி அதை உள்ளே தள்ளுவது... அதுதான் ''டாக்கி பொத்தன்'' 39அவர்கள் பெட்டி கார்களை அங்கு வைத்திருந்தனர். அவன் அந்த இரும்புத் தொழிற்சாலைக்கு சென்று, அவைகளில் ஒன்றை வாங்கி அதற்கு படிக்கட்டுகள் செய்தான். பின்பு அவன் பழைய பெட்டிகளை வாங்கி, மேசையை செய்தான். ஒரு நாள் நான் ''அவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு வரலாம்“ என்று எண்ணினேன். அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு நான் ஈ. வி. நைட் என்பவரின் மகளை ஈ.டி. ஸ்லைடர் என்பவரின் மகனுக்கு திருமணம் செய்து வைத்தேன். ஓஹையோவிலுள்ள மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் ஈ.வி. நைட் ஆவார். அவர் முன்கூட்டி உண்டாக்கும் கான்கிரீட் பலகைகளைக் கொண்டு வீடு கட்டும் (Prefab houses) தொழிற்சாலை ஒன்றை நடத்துகிறார். திரு. ஈ.டி. ஸ்லைடர் என்பவர் மணல், கருங்கல் ஜல்லி (gravel) போன்றவைகளை விற்கும் கம்பெனியின் அதிபர். இருவருமே கோடீஸ்வரரின் பிள்ளைகள். அவர்கள் திருமணத்தை நான் நடத்தி வைத்தேன். அதை நடத்துவதற்காக நான் ஓரிடத்திற்குச் சென்று பயிற்சி எடுத்துக் கொண்டேன். ஒரு அறைக்கு சென்று தலையணையின் மேல் முழங்கால் படிவதும், அந்த ஆடம்பரங்கள் அனைத்தும் நான் முன்கூட்டியே செய்து பார்த்து, பின்பு அவர்களுடைய திருமணத்தை நடத்த வேண்டியதாயிற்று. திருமணம் முடிந்து அவர்கள் வெளியே வந்தபோது... இந்த ஏழை தம்பதிகளும் ஒரு பழைய அறையில் நின்று கொண்டு - அங்கு எங்களுக்கு ஒரு சிறு படுக்கை இருந்தது. அதே திருமண ஒழுங்கின்படி விவாகம் செய்து கொண்டனர். 40இந்த பணக்காரத் தம்பதிகளை விஜயம் செய்து விட்டு வரலாமென்று ஒரு நாள் புறப்பட்டுச் சென்றேன். அவர்கள் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்களுடைய பெற்றோர்கள் கோடீஸ்வரர்கள். அவர்களுக்கு ஒரு நல்ல வீடு இருந்தது. வெளிப்படையாகக் கூறினால், ஈ.வி.நைட்டின் மாளிகையிலுள்ள கதவுகளின் கைப்பிடிகள் அனைத்துமே பதினான்கு காரட் தங்கத்தினால் ஆனவை. அதிலிருந்து அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தனர் என்பதை நீங்கள் அறியலாம். அவர்கள் வேலை செய்ய வேண்டிய அவசியமேயில்லை. அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு நல்ல காடிலாக் கார் கொடுக்கப்பட்டது. அவர்களிருவரும் தங்கள் பெற்றோருக்கு ஒரே பிள்ளை அவர்களுக்கு வேண்டிய அனைத்தும் இருந்தது. ஒரு நாள் அவர்களுடைய வீட்டுக்கு நான் சென்றிருந்தேன். நான் எப்படி அவர்களுக்கு அறிமுகமானேன் என்றால். அவர்களுடைய நண்பர்களில் ஒருவர் எனக்கு நெருங்கிய நண்பர் ஆவார். நாங்கள் அனைவரும் ஒன்றாகப் பழகி நண்பர்களானோம், அப்படித்தான் நான் அறிமுகமானேன். அப்பொழுது, நான் அவர்களுக்கு விவாகம் செய்து வைக்க வேண்டுமென்று என்னைக் கேட்டுக் கொண்டனர். 41எனவே அவர்களை நான் காணச் சென்றேன். என் பழைய ஃபோர்ட் காரை விட்டு வெளியே இறங்கி, படிகளில் ஏறி அருகே சென்ற போது, அவர்களுடைய சத்தம் எனக்கு கேட்டது. அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டிருந்தனர். அவர்கள் நடனமாடச் சென்றிருந்தனர். அவள் சிறந்த அழகி, அழகு ராணிகளில் ஒருவள். அவள் அழகு போட்டிகளில் அநேக விருதுகளைப் பெற்று, சில கார்களையும் கூட பரிசாக வென்றவள். அவர்களை நான் பார்த்த போது, அவன் ஒரு மூலையிலும், அவள் வேறொரு மூளையிலும் உட்கார்ந்து கொண்டு, அவளுடன் நடனமாடின ஒரு பையனை அல்லது ஒரு பெண்ணைக் குறித்தோ வீண்வாதம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் என்னைக் கண்டவுடன் வேகமாக குதித்தெழுந்து, ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு கதவண்டையில் வந்து, “ஹல்லோ சகோ, பிரான்ஹாமே எப்படியிருக்கிறீர்கள்?'' என்று கேட்டனர். நான், “நன்றாயிருக்கிறேன். நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?'' என்று கேட்டேன். அவன், “ஓ, நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். இல்லையா, தேனே?'' என்றான். அவள், “ஆம் அன்பே” என்றாள். 42பாருங்கள், உண்மையாயிராத ஒன்றை நீங்கள் இருப்பது போல் காண்பித்து பாசாங்கு செய்கிறீர்கள். தீட்டப்பட்ட சித்திரத்தினால் உங்களுக்கு வெப்பம் கிடைக்காது. இங்குள்ள சில சபைகள், ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பெந்தெகொஸ்தேயை வர்ணச் சித்திரமாக்க முயல்வது போன்று. வர்ணச் சித்திரத் தீயிலிருந்து உங்களுக்கு வெப்பம் கிடைக்காது. அன்று இருந்தது போலவே இன்றும் பெந்தெகொஸ்தே உண்மையாயுள்ளது. அக்கினி இன்னும் விழுந்து கொண்டிருக்கிறது. அது வர்ணச் சித்திரத்தின் நெருப்பல்ல. அது உண்மையான அக்கினி. அப்படித்தான் அவர்கள் இருந்தனர். அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ எனக்கு பிரியமில்லை. 43மலைச் சிகரத்துக்கு மறுபுறம் ஆற்றங்கரையில் அந்த மற்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். ஒரு சினிக்கிழமை பகல் நான் மெல்ல நழுவிச் சென்று, அவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்று பார்த்து வரலாம் என்று எண்ணினேன். என் முகம் அழுக்கு படிந்திருந்தது. நான் உடுத்தியிருக்கு பணி உடையும் அழுக்காயிருந்தது. என்னிடம் வேலை சாமான்கள் இருந்தன. மின்னலினால் எத்தனை இன்ஸலேட்டர்கள் சேதமடைந்துள்ளன என்று ஆற்றங்கரையிலுள்ள மின்சாரக் கம்பிகளின் வழியாக நடந்து பார்வையிடுவது போல், நான் மெல்ல நழுவி அவர்களைக் காணலாமென்று எண்ணினேன். நான் சென்ற போது, அந்த பழைய ஷெவர்லே கார் முன்பாகத்தில் நின்று கொண்டிருந்தது. அதுதான் அவர்கள் விவாகத்தை நடத்தி வைத்து ஏறக்குறைய ஒரு ஆண்டு கழித்து, அங்கு... கதவு திறந்திருந்தது, அவர்கள் உரையாடுவதை என்னால் கேட்க முடிந்தது. அப்படிக் கூறுவது மாய்மாலம் எனவே அவர்கள் என்ன உரையாடுகின்றனர் என்பதை தெளிவாகக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டுமெனக் கருதி, நான் அருகில் சென்றேன். நான் ஒன்றை நன்கு கண்டு கொண்டு, அதன் பின்பு என்ன பேசுகிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். என்னும் நிச்சயத்தை உடையவனாயிருக்க விரும்புகிறேன். தேவனுடைய வார்த்தையைக் குறித்த விஷயத்திலும் நான் அப்படித்தான் செய்கிறேன். அது சத்தியம் தானா? இல்லையா? அவர் தமது வார்த்தையை நிறைவேற்றுவரா? அவர் வார்த்தையை எப்பொழுதும் நிறை வேற்றி வருகிறாரா? போன்றவைகள். அவர் தமது வார்த்தையை நிறைவேற்றாமல் போனால், அவர் தேவன் அல்ல பாருங்கள். அவர் வார்த்தையை நிறைவேற்றினால் அவர் தேவன், பாருங்கள். 44அவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்று அறிய விரும்பினேன். எனவே அவர்களுடைய வீட்டின் பக்கத்தில் மெல்ல நழுவிச் சென்றேன். அப்பொழுது அவன் ''தேனே, அதை உனக்கு எப்படியாவது வாங்கித் தர வேண்டுமென்று நினைத்தேன்'' என்று கூறுவதைக் கேட்டேன். அவள், “இனியவரே, பாருங்கள். இப்பொழுது எனக்கு இருக்கிற உடை போதும், அது மிகவும் நன்றதாயிருக்கிறது. உமது விருப்பத்தை மெச்சுகிறேன். ஆனால் பாருங்கள்...'' என்றாள். நான் அந்த பெட்டிக்காரின் கதவு திறந்திருக்கும் பக்கம் சென்றால், அங்குள்ள பிளவின் (Crack) வழியாக பார்க்கலாமே என்று கருதி, வீட்டைச் சுற்றி மறுபக்கம் மெல்லச் சென்றேன். அவன் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தான். அவள் அவன் மடியில் அமர்ந்திருந்தாள். அவனுடைய கை அவள் தோளின் மேலும், அவளுடைய கை அவனுடைய தொளின் மேலும் இருந்தது அவன் சிறு துவாரம் கொண்ட பழைய தொப்பி ஒன்றை வெளியே எடுத்து அதிலிருந்த தன் ஊதியத்தை மேசையின் மேல் கொட்டினான். அவன், “மளிகை சாமான்களுக்கு இவ்வளவு, காப்பீட்டுக்காக இவ்வளவு, காருக்காக இவ்வளவு என்று பங்கிட்டான். அவர்களால் செலவை சமாளிக்க முடியவில்லை”. என்ன நடந்ததென்றால், அவன் கடை சன்னலில் ஒரு உடையைக் கண்டான் (அவன் அதை இரண்டு வாரங்களாக பார்த்துக் கொண்டே வந்தான்). அதன் விலை ஒரு டாலர், அதை அவனுடைய மனைவிக்கு வாங்கித் தர விரும்பினான். அவன் தேனே, “அதை அணிந்து கொண்டால், நீ மிகவும் அழகாயிருப்பாய்'' என்றான். அவளோ, “தேனே, எனக்கு ஒரு உடை இருக்கிறதே, எனக்கு அது தேவையில்லை'' என்றாள். பார்த்தீர்களா? அந்த சிறு ராணி... 45நான் பின்னால் அடி எடுத்து வைத்து திரும்பிப் பார்த்தேன். அந்த செல்வந்தரின் வீட்டின் உச்சியிலுள்ள கோபுரத்தை என்னால் காண முடிந்தது. அங்கு நான் நின்று கொண்டு சில நிமிடங்கள் அதையே உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். ''உண்மையில் யார் பணக்காரன்?'' என்று நான் சிந்தித்தேன். நான், “பில் பிரான்ஹாமே, இவ்விரண்டில் ஒரு இடத்தை நீ தெரிந்து கொள்ள வேண்டுமானால், நீ எந்த இடத்துக்கு செல்வாய்?'' என்று மனதில் எண்ணினேன். மலையின் மேலுள்ள அந்த அழகான மாளிகையை நான் தெரிந்துகொள்ள மாட்டேன். ஆனால் கீழேயுள்ள வீட்டைப் பேணிப் பாதுகாக்கும் பெண்ணைத் தெரிந்துகொள்வேன் - என்னை நேசித்து, என்னுடன் தங்கி, எனக்காக ஒரு நல்ல குடும்பத்தை அமைத்து, தனக்கு வேண்டிய பொருள்களுக்காக என் இரத்தத்தை உறிஞ்சாமல் என்னுடன் தங்கி என்னில் ஒரு பாகமாக இருப்பவளை. 46அந்த சம்பவம் எப்பொழுதும் என் இருதயத்தில் நிலை கொண்டுள்ளது. ஒருவன் அழகுள்ள பெண்ணைத் தெரிந்து கொண்டான். மற்றவன் பண்பைத் தெரிந்து கொண்டான். அதைதான் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.முதலாவதாக அவளிடம் பண்பு உள்ளதா என்று பாருங்கள். அதன் பின்பு அவளை நீங்கள் நேசித்தால், மிகவும் நலமாயிருக்கும். கவனியுங்கள், தேவன் முதலாவதாக சிருஷ்டித்த ஆதாமுக்கு தன் மனைவியைத் தெரிந்து கொள்ளும் அவசியம் இருக்கவில்லை. அவன் தெரிந்து கொள்ளவில்லை. தேவன் ஒருத்தியை உண்டாக்கினார், எனவே அவனுக்குத் தெரிந்து கொள்ள வேறு யாருமேயில்லை. அவள் அவனை தேவனுடைய வார்த்தையிலிருந்து விலகச் செய்தாள் என்று நாம் காண்கிறோம். அவன் அந்த விஷயத்தில் ஜெபம் செய்யவில்லை. உங்களையும் என்னையும் போல், அவனுக்கு தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவளோ தேவனுடைய குமாரன் என்னும் ஸ்தானத்திலிருந்து அவனை விலகச் செய்தாள். அவள் நவீன வாழ்க்கையை அவனுக்குக் காண்பித்தாள். அவர்கள் உண்மையில் அப்படி செய்திருக்கக் கூடாது. ஆனால் அவளுடைய குணம், அவள் தவறென்பதைக் காண்பித்தது. அவளுடைய நோக்கங்களும் குறிக் கோள்களும் தவறாயிருந்தன. அவள் தன் புத்தியை உபயோகித்து, அவன் கண்டு கொண்ட தேவனுடைய வார்த்தைக்கு முரணாயுள்ள நவீன புது வெளிச்சம் வாழ்க்கை நடத்துவதற்கு மிகச் சிறந்தது என்று கூறி அவனை இணங்கச் செய்தாள். 47இன்று எத்தனை பெண்கள் அல்லது ஆண்கள், ''இந்த மார்க்கம் (பெந்தெகோஸ்தே பையன்களே)... இந்த மார்க்கம் பழைய நாகரீகமானது. இதை நம்பாதே“ என்று கூறி, ஒரு நல்ல பெண்ணை தேவனிடமிருந்து அகற்ற முயல்கின்றனர்? ஒரு பெண்ணை மணந்து கொள்வதற்கு முன்பு ஊக்கமாக ஜெபியுங்கள். அவள் எவ்வளவு அழகாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை - அதே போன்று தான் ஆணை கணவனாகத் தெரிந்து கொள்ளும் விஷயத்திலும். அவன் அவளை தேவனுடைய சித்தத்திலிருந்து விலகச் செய்து, அவன் செய்யக் கூடாத ஒன்றை செய்யக் காரணமாயிருந்து, அதன் மூலம் மானிடவர்க்கம் முழுவதற்கும் மரணத்தை விளைவித்தாள். அதனால் தான் ஒரு பெண் போதிக்கவோ, பிரசங்கம் செய்யவோ, தேவனுடைய வார்த்தையை எந்த விதத்திலும் கையாளவோ கூடாது என்று வேதம் அவளுக்கு தடை விதித்துள்ளது. சகோதரியே, உங்களில் அநேகர், “பிரசங்கம் செய்வதற்கு தேவன் என்னை அழைத்திருக்கிறார்'' என்று கூறுகிறீர்கள் என்று நானறிவேன். நான் உங்களுடன் வாதாடப் போவதில்லை. ஆனால் நீங்கள் அப்படி செய்யக் கூடாதென்று தேவனுடைய வார்த்தை உரைக்கிறது என்பதை உங்களிடம் கூற விரும்புகிறேன். ''அவள் உபதேசம் பண்ணவும் அதிகாரம் செலுத்தவும் கூடாது. அவள் அமைதலாயிருக்க வேண்டும்'' (தீமோ. 2:12). ''நான் அப்படி செய்ய கர்த்தர் என்னிடம் கூறினார்“ என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். அதை நான் துளிகூட சந்தேகிக்கவில்லை. அன்றிரவு நான் பிலேயாமைக் குறித்து அளித்த செய்தியை கேட்டீர்களா? பிலேயாம் முதலில் தேவனுடைய திட்டவட்டமான தீர்மானத்தை பெற்றான். “அதை செய்யாதே'' என்று அதன் பின்பும் அவன் அதில் நிலைத்திருக்க விரும்பின காரணத்தால், முடிவில் அவன் சென்று அதை செய்யும்படி கூறினார். தேவன் ஒருக்கால் உங்களை பிரசங்கிக்க அனுமதிக்கலாம். நான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அது அவருடைய மூல வார்த்தையின்படியும் திட்டத்தின்படியும் அமைந்திருக்கவில்லை. அவள் கீழ்பட்டிருக்க வேண்மென்று நியாயப்பிரமாணமும் கூறுகிறதே. உண்மை. எனவே அவள் அப்படி செய்யக் கூடாது. 48இயற்கை மணவாட்டி ஆவிக்குரிய மணவாட்டிக்கு எவ்வாறு எடுத்துக்காட்டாயிருக்கிறாள் என்பதை கவனியுங்கள். அவள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டாள்; மனிதன் அவளுக்காக உண்டாக்கப்படவில்லை என்று தேவனுடைய வார்த்தை உரைக்கிறது. நான் இன்னும் சில நிமிடங்களில் கிறிஸ்துவின் மணவாட்டியை குறித்து பேசப் போகிறேன். அதற்கு பின்புறக் காட்சியாக (background) இதை காண்பிக்க முயல்கிறேன். ஸ்திரீ மனிதனுக்காக உண்டாக்கப்பட்டாள். மனிதன் ஸ்திரீக்காக உண்டாக்கப்படவில்லை. எனவே தான் பழைய நியாயப்பிரமாணத்தில், ஒரு மணிதன் அநேக பெண்களை மணந்து கொள்ளுதல் சட்டபூர்வமான ஒரு செயலாக இருந்தது. தாவீதுக்கு ஐந்நூறு மனைவிகள் இருந்தனர் என்பதை பாருங்கள். அவன் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாயிருந்தான் என்று வேதம் கூறுகின்றது - ஐந்நூறு மனைவிகளைக் கொண்டவன் சாலோமோனுக்கு ஆயிரம் மனைவிகள் இருந்தனர். ஆனால் இந்த ஸ்திரீகளில் ஒருவராவது வேறொரு புருஷனை மணக்கக் கூடாது. 49''விவாகமும் விவாகரத்துக்கும்'' என்னும் என் செய்தியின் ஒலிநாடாவை வாங்கிக் கேளுங்கள். அண்மையில் டூசானில் மலையின் மேல் நான் இதைக் குறித்து ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தேன். அந்த அக்கினி ஸ்தம்பம் மலையில் புனல் (Funnel) வடிவத்தில் மேலும் கீழும், முன்னும் பின்னும் சுற்றி வருவதைக் காண்பதற்காக, அவர்கள் பள்ளிகூடத்தை சீக்கிரமாகவே மூடிவிட்டனர். இங்குள்ளவர் அதை அறிவார்கள் - அதை பார்த்தனர். அது அவர் “விவாகமும் விவாகரத்துக்கும் பிரச்சனைக்கு அப்பொழுது உண்மையை எனக்கு எடுத்துக் கூறினார். ஒரு சாரார் ஒரு பக்கமும், மற்றொரு சாரார் மற்றொரு பக்கமும் சென்றால்”, எங்காவது உண்மை இருக்க வேண்டும். அந்த ஏழு முத்திரைகளுக்குப் பிறகு, அவர் அதைக் குறித்த உண்மையை வெளிப்படுத்தி தந்தார். 50இப்பொழுது கவனியுங்கள். அவளுக்கு ஒரே ஒரு கணவன் தான் இருக்க வேண்டும். ஏனெனில் ஸ்திரீ மனிதனுக்காக உண்டாக்கப்பட்டாள். மனிதன் ஸ்திரீக்காக உண்டாக்கப்படவில்லை. அந்த ஐந்நூறு ஸ்திரீகளுமே தாவீதின் மனைவி. அது ஒரு முன்னடையாளம். ஆயிரம் வருட அரசாட்சியில் கிறிஸ்து சிங்காசனத்தில் உட்காரும் போது, அவருடைய மணவாட்டி ஒரே ஒரு நபராக இருப்பதில்லை. அது ஆயிரக்கணக்கான பேர்களைக் கொண்டதாயிருக்கும். அவர்கள் அனைவரும் ஒருமித்து மணவாட்டி. தாவீது அநேக நபர்களை மனைவிகளாகப் பெற்றிருந்தான். ஆனால் ஒரே... அவர்களெல்லாரும் ஒருமித்து அவன் மனைவி - விசுவாசிகள் அனைவரும் ஒருமித்து கிறிஸ்துவின் மணவாட்டியாக இருப்பது போல் ஏனேனில் அது அவள், ஸ்திரீ அவன் மனிதன். நாம் கிறஸ்துவுக்காக உண்டாக்கப்பட்டோம். கிறிஸ்து நமக்காக உண்டாக்கப்படவில்லை அதைதான் இன்று நாம் நமது பாட புஸ்தகங்களில் செய்ய முயல்கிறோம். அதாவது, நாம் கிறிஸ்துவாகிய வார்த்தைக்கு பொருந்துவதற்கு பதிலாக வார்த்தை நமக்கு பொருந்தும்படி செய்ய முயல்கிறோம். அது தான் வித்தியாசம். 51ஒரு மனிதன் ஒரு குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணைத் தெரிந்து கொள்ளும் போது, அவன் அழகில் மேல் சார்ந்து அப்படி செய்யக் கூடாது. ஏனெனில் அழகு வஞ்சிக்கத்தக்கது. அழகு (நவீன உலகு அழகு பிசாசினால் உண்டானது). அங்கு யாரோ ஒருவர் “பிரசங்கியாரே ஜாக்கிரதை'' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. நான் என்ன கூறுகிறேன் என்றால், இவுலகில்அழகு என்றழைக்கப்படுவது முற்றிலும் பிசாசினால் உண்டானது. அதை நான் நிரூபிக்கிறேன். இப்பொழுது நான் கூறின இந்த குறிப்பை அடிப்படையாகக் கொண்டு அது சரியா தவறா என்று தேவனுடைய பரிசுத்த வார்த்தையை ஆராய்வோம். பெண்களாகிய உங்களில் சிலர் அழகாயிருக்க விரும்பினால், அது எங்கிருந்து வந்தது என்பதைப் பாருங்கள். ஆதியிலே சாத்தான் மிகவும் அழகுள்ளவனாயிருந்து, முடிவில் தேவ தூதர்களை வஞ்சித்தான். அவன் தேவதூதர் அனைவரிலும் அழகில் மிகச் சிறந்தவன். அது பிசாசில் இருந்தது என்பதைக் காண்பிக்கிறது. நீதிமொழிகள் கூறுகின்றது... ''அழகு மாயை'' என்று சாலோமோன் கூறுகிறான். அது உண்மை. பாவம் அழகாயுள்ளது. நிச்சயமாக, அது கவர்ச்சியுள்ளது. 52உங்களை ஒன்று கேட்டு உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இதை சில நிமிடங்கள் நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். உலகிலுள்ள எல்லா உயிரினங்களிலும் (பறவைகள், மிருகங்கள்), மிருகங்களை நீங்கள் எடுத்துக் கொண்டால், மனிதனைத் தவிர மற்றெல்லா மிருகங்களிலும் ஆண் இனம் தான் அழகாயுள்ளது, பெண் இனம் அல்ல ஏன் அப்படி? மானைப் பாருங்கள். ஆண் மான் தான் கொம்புகளுடன் அழகாயுள்ளது. ஆனால் பெண் மான். கோழியைப் பாருங்கள் - புள்ளியுடைய கோழியையும் பெரிய, அழகான சிறகுகளையுடைய சேவலையும். பாருங்கள், காட்டு வாத்தையும் அதனுடைய பெண் ஜதையும் பாருங்கள், பார்த்தீர்களா? உலகத்திலிருக்கிற எந்த இனத்தை எடுத்தாலும் ஸ்திரீயை போல எதுவுமே அவ்வளவு வஞ்சனையுள்ளதாய் கீழே தள்ளுகிற அளவிற்கு இல்லை. இப்பொழுது சகோதரியே, எழும்பி வெளியே போய்விடாதீர்கள். இதனுடைய கடைசி பாகத்தை கேட்குமட்டுமாக பொருத்திருந்து காத்திருங்கள் பார்த்தீர்களா? புரிகிறதா? ஸ்திரீயைத் தவிர வேறு எந்த பெண் இனமும் ஒழுக்கம் கெட்டதாய் இருக்க முடியாது. நீங்கள் நாயை 'ஸ்லட்' (Slut) என்று அழைக்கிறீர்கள். பன்னியை 'சோ' (Sow) என்று அழைக்கிறீர்கள். ஆனால் இங்குள்ள திரைப்பட நட்சத்திரங்கள் பாதி பேரைக் காட்டிலும் அவைகளுக்கு அதிக ஒழுக்கம் உள்ளது. அவை ஒழுக்கமாக இருக்க முடியுமேயன்றி, வேறெதாகவும் இருக்க முடியாது. 53இந்த ஒழுக்கங்கெட்ட நடத்தைக்காக ஸ்திரீ ஒருவள் மாத்திரமே மாற்றப்பட்டாள். அது உண்மை. அழகு அவளை எங்கு கொண்டு செல்லுகிறது என்று பாருங்கள்? அதனால் தான் இன்று பெண்களின் அழகு அதிகரித்துள்ளதை நாம் காண்கிறோம். 'பெர்ல் ப்ரையனை' (Pearl Bryan) நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அவளுடைய படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவள் அமெரிக்காவிலேயே சிறந்த அழகி என்று கருதப்பட்டவள். ஆனால் இன்றுள்ள எந்த பள்ளிக் கூடப் பெண்ணும் அவளை அழகில் தோற்கடித்து, அவளைப் பின் வரிசையில் தள்ளிவிடுவாள். அது அப்படித்தான் இருக்க வேண்டுமென்று உங்களுக்குத் தெரியுமா? அது அவ்வாறே இருக்குமென்று வேதம் கூறியுள்ளதென்று உங்களுக்குத் தெரியுமா? ஆதியிலே வீழ்ச்சி பெண்ணின் காரணமாக உண்டானதென்று உங்களுக்குத் தெரியுமா? வீழ்ச்சி முடிவும் அவ்வாறே இருக்கும். பெண்கள் ஆதிக்கத்தில் வந்து, ஆண்களின் மேல் அதிகாரம் செலுத்துதல் போன்றவை. வேதம் அவ்வாறு கூறுகிறதென்று உங்களுக்குத் தெரியுமா? அவள் என்றைக்கு மனிதனுடைய உடைகளை உடுத்தி, தலைமயிரை கத்தரிக்கத் தொடங்கினாளோ - இவையனைத்தும் தேவனுடைய வார்த்தைக்கு முரணாயுள்ளன. அவள் சபைக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறாள் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஸ்திரீகளை கவனித்துக் கொண்டே வாருங்கள், அப்பொழுது சபை என்ன செய்கிறது என்பதை அறிந்து கொள்வீர்கள். அது முற்றிலும் உண்மை. தேவனுடைய வார்த்தை எவ்வளவு உண்மையாயுள்ளதோ, இதுவும் அவ்வளவு உண்மையானது. 54எந்த பெண் இனமும் தன்னை ஸ்திரீயின் அளவுக்கு தாழ்த்த முடியாது. ஆயினும் அதன் மூலம் அவள்... அவள் மூல சிருஷ்டியில் உள்ளன - பறவை, ஆணும், பெண்ணும்; மிருகம், ஆணும் பெண்ணும். ஆனால் மானிட இனத்தில், தேவன் மனிதனை மாத்திரமே சிருஷ்டித்தார். அவர் அவளை அவனிலிருந்து வெளியே எடுத்தார் - ஸ்திரீ மனிதனின் உபபொருளாக (By-Product) இருக்கிறாள். ஏனெனில் தேவன் அவளை மூல சிருஷ்டிப்பில் நியமிக்கவில்லை. வேதத்தை ஆராய்ந்து பாருங்கள். அது முற்றிலும் உண்மை. தேவன்... இல்லை, ஐயா. அவருடைய அவள் மாத்திரம் சரியாக நடந்து கொண்டால், மனிதனைக் காட்டிலும் அவள் எவ்வளவு அதிக நன்மையை அனுபவிக்கிறாள் அவள் சோதனை செய்யப்படுகிறாள். அவள் மூலமாக மரணம் பிரவேசித்தது. அவளோ மரணம் அனைத்துக்கும் குற்றவாளியாயிருக்கிறாள். ஆனால் தேவனோ ஜீவனை மறுபடியும் கொண்டு வருவதற்கு ஒருவரை உபயோகித்தார். ஸ்திரீயின் மூலம் தமது குமாரனை தோன்றச் செய்தார் - கீழ்ப்படிதலுள்ள ஒருவரை ஆனால் கெட்டவன் ஒருவன் இருந்தான் அவன் மிகவும் பொல்லாதவன் அவனைக் காட்டிலும் நீசமானவன் வேறெவனுமில்லை. 55சாத்தானின் குமாரனாகிய காயீன் தேவன் அழகை அங்கீகரிப்பவர் என்று நினைத்திருந்தான். இன்றைக்கும் அவன் அவ்வாறே நினைக்கிறான். காயீன் சாத்தானின் குமாரன். நீங்கள் ''சரி இப்பொழுது...'' எனலாம். நாம் அதைக் குறித்த விவரங்களுக்கு இப்பொழுது செல்ல முடியாது. ஆனால் உங்களிடம் இதைக் கூற விரும்புறேன். அவன் பொல்லாங்கனால் உண்டானவன் என்று வேதம் கூறுகின்றது (1யோவான் 3:12) அத்துடன் அது முற்றுபெற்றுவிட்டது. சரி. அவன் சாத்தானின் குமாரன் ஒரு பலிபீடத்தை கட்டி ஆராதனைக்காக அதை மிகவும் அழகுப்படுத்தினால், தேவன் அதை கெளரவிப்பார் என்று அவன் எண்ணினான். அவர்கள் இன்றைக்கும் அவ்வாறே நினைக்கின்றனர். நிச்சயமாக, நாங்கள் பெரிய கட்டிடங்களைக் கட்டுகிறோம். உங்களுக்கு பெரிய ஸ்தாபனம் உண்டாயிருக்கும். நாங்கள் மிகப் பெரிய கட்டிடங்களைக் கட்டி, மிகவும் நன்றாக உடுத்தியுள்ள மக்களையும், மிகவும் நாகரீகமான குருவானவர்களையும் பெற்றிருப்போம். சில சமயங்களில், தேவன் அதிலிருந்து ஒரு கோடி மைல் தூரம் விலகி சென்றுவிடுகிறார். அது உண்மை. ஆயினும் அது சபையாக கருதப்படுகிறது. 56ஆராதனை உத்தமம், பலி போன்றவைகளுக்கு மாத்திரம் தேவன் மதிப்பு கொடுப்பரானால், காயீன் ஆபேலைப் போலவே அவ்விஷயங்களில் நீதிமானாயிருந்தான். ஆனால் வெளிப்படுத்தலின் மூலம் மாத்திரமே ஆபேல் அவனுடைய பெற்றோர் ஆப்பிள் பழத்தை தின்னவில்லை என்பதை புரிந்து கொண்டான். நான் இப்பொழுது ஒன்றைக் கூறப் போகிறேன். அது ஒரு போதகருக்கு நன்றாக தென்படாது. ஆயினும் அதை நான் கூறப் போகின்றேன் இங்குள்ளவர்களில் சிலர் நகைச்சுவை துணுக்குகளை கூறுகின்றனர். எனவே நானும்... இதை நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. ஆயினும் அதை கூறுகிறேன். ஆப்பிள் பழங்களைத் தின்பதால், “ஸ்திரீகளுக்கு தாங்கள் நிர்வாணமாயுள்ளனர் என்னும் உணர்வு ஏற்பட்டால், நாம் மறுபடியும் ஆப்பிள் பழங்களை அவர்களுக்கு கொடுப்போம். அப்படி கூறினதற்காக என்னை மன்னியுங்கள். அது உங்களை மாற்றி... உங்களிடம் பெண்களைக் குத்தி பேசி, இவ்வளவு நேரமாக பிடித்துக் வைத்திருக்கிறேன்'' அடுத்தப்படியாக வருவதைக் கேட்க நீங்கள் ஒரு நிமிடம் இறுக்கமற்றவர்களாக (Relaxed) இருக்க வேண்டுமெனக் கருதி இதை கூறினேன். இப்பொழுது கவனியுங்கள். அது ஆப்பிள்கள் அல்ல என்று நமக்குத் தெரியும். 57சபையானது மனிதன் புரிந்துள்ள சாதனைகளைப் போன்ற சாதனைகளைப் புரிந்து, விஞ்ஞான ரீதியாக்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் படங்களையும், கூர்மையான கோபுரங்களையும் வைத்து கவர்ச்சி மிக்கதாக்கி, அதை விஞ்ஞான ரீதியுள்ள சபையாக செய்ய முயல்கின்றனர். பெந்தெகொஸ்தேயினரும் இந்த சக்கரத்தில் சிக்கிக் கொண்டது மிகவும் வருந்ததக்கது. கையில் ஒரு கஞ்சிராவை வைத்து தெரு மூலையில் நின்று, தேவனுடைய ஆவி சுற்றிலும் இருப்பது உனக்கு அதிக நன்மை பயக்கும், ஆனால் நீயோ மற்றவர்களுடன் உன்னை ஒப்பிட்ட முயல்கிறாய். உன்னை நீ ஸ்தாபனமாக்கிக் கொண்டாய். அது தான் உன்னை அவ்வாறு செய்யத் தூண்டியது, பாருங்கள். சபைகள் விஞ்ஞான ரீதியாவதற்கு முயல்கின்றன மனிதன் விஞ்ஞானத்தில் முன்னேற்றம் அடையும் போது, அவன் நாள்தோறும் தன்னை கொலை செய்து கொள்கிறான். வெடி மருந்து கண்டுபிடிப்பு என்ன செய்ததென்று பாருங்கள். அவன் வாகனங்களை கண்டு பிடித்தபோது, அது வெடி மருந்தைக் காட்டிலும் இப்பொழுது அதிகம் பேர்களை கொல்லுகிறது. அவன் தற்பொழுது ஹைட்ரஜன் வெடிகுண்டை வைத்திருக்கிறான். அதைக் கொண்டு அவன் என்னவெல்லாம் செய்யப் போகிறான் என்று வியப்புறுகிறேன். உண்மை. 58சபையும் அவ்வாறே உள்ளது. அது விஞ்ஞானத்தின் மூலம் சாதிக்க நினைக்கும் போது - மனிதனால் உண்டாக்கப்பட்ட திட்டங்களின் மூலம், அது உங்களை முன்னைக் காட்டிலும் அதிகமாக தேவனை விட்டு விலகச் செய்து, மரணத்தில் ஆழ்த்துகிறது. அது உண்மை. உங்கள் மனைவியைத் தெரிந்து கொண்ட விதமாகவே உங்கள் சபையையும் தெரிந்து கொள்ளாதீர்கள். விஞ்ஞானம் சபைக்கு செய்துள்ளது ஒரு அதிசயமே. ஆனால் அப்படிப்பட்ட சபையிலிருந்து நீங்கள் விலகியிருப்பது நல்லது. அவன் வர்ணங்கள், பவுடர்கள் அனைத்தும் செய்தான். நீங்கள் அவருடைய வார்த்தையின் பண்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்பொழுது நாம் இயற்கை மணவாட்டியுடன் சபை மணவாட்டி என்று அழைக்கப்படுபவளை ஒப்பிடுவோம். இன்று விவாகம் செய்து கொள்ளப்போகும் ஒரு பெண்ணை எடுத்துக் கொள்வோம். விஞ்ஞானம் அவளுக்கு என்ன செய்துள்ளதென்று கவனியுங்கள். அவள் தன் தலைமயிரை கத்தரித்துக் கொள்கிறாள் - ஜாக்வலின் கென்னடி அலங்காரம் போன்ற ஏதாவதொன்று, பாருங்கள். வேதம் அப்படி செய்பவளை விவாகாரத்தின் மூலம் தள்ளிவிடலாமென்று தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளும் எவளும் கனவீனமான ஸ்திரீயாயிருக்கிறாள். வேதம் அவ்வாறு கூறுகிறது. அது உண்மை. அது உங்களுக்குத் தெரியும். ஓ, ஆமாம். நான் கலிபோர்னியாவில் அதிகமாக பிரசங்கித்துள்ளதால், உங்களுக்கு தெரியாமலிருக்க வழியில்லை. அது உண்மை. ஆனால் அதனால் என்ன உபயோகம்? அவர்கள் அதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். நீங்கள் ஒரு பன்றியை ஆட்டுக்குட்டியாக மாற்ற முடியாது. 59கவனியுங்கள். இதன் பிறகு நீங்கள் என்னை வெறுக்கப் போகின்றீர்கள், ஆனால் உண்மையை அறிந்து கொள்ளப் போகின்றீர்கள். இதை நாம் ஒப்பிடுவோம். அவள் வர்ணம் தீட்டிக் கொண்டு வருகிறாள் - இல்லாத ஒன்றை இருப்பது போல் காண்பிக்க - இந்த நவீன மணவாட்டி. அவளுடைய முகத்தைக் கழுவிப் பாருங்கள், அவளை விட்டு ஓடிவிடுவீர்கள். அந்த வர்ணத்தையெல்லாம் நீங்கள் களைந்தால், அவளுடைய விகாரமான முகத்தோற்றம் உங்களை மரண பயத்தில் ஆழ்த்தும். இன்றைய சபையும் “மாக்ஸ் பாக்டர்'' (Max Factor) அழகூட்டும் சாதனங்களாகிய வேத சாஸ்திரத்தினால் தன்னை வர்ணம் தீட்டி அழகுபடுத்தியுள்ளது. இருவருக்கும் பொய்யான அழகு முகங்கள் உள்ளன - மனிதனால் உண்டாக்கப்பட்ட அழகு, தேவனால் உண்டாக்கப்பட்ட அழகல்ல. இருவருக்கும் அதிக நற்பண்புகள் இல்லை. கவனியுங்கள், சாத்தானைப் போல் - வஞ்சிப்பதற்கு போதிய அளவு. நவீன மணவாட்டியை எடுத்துக் கொள்ளுங்கள்... அவள் கால்சட்டை அணிகிறாள், வர்ணம் தீட்டிக் கொள்கிறாள், தலை மயிரைக் கத்தரித்துக் கொள்கிறாள், மனிதனைப் போல் தோற்றமளிக்கும் உடைகளை உடுத்திக் கொள்கிறாள், இவைகளை செய்வதில் தவறில்லை என்று கூறும் போதகருக்கு செவி கொடுக்கிறாள். அப்படி கூறும் ஒரு போதகர் வஞ்சகன். அவர் இதற்கு அப்பாலுள்ள ஸ்தலத்தில் துன்பம் அனுப்பவிப்பார். அது உண்மை. அவள் இல்லாத ஒன்றைப் போல் தோற்றமளித்து ஏமாற்றுகிறாள். 60சபையும் அதை தான் செய்கிறது. அது டிடி, பி.எச்.டி, எல்.எல்.டி. போன்ற பெரிய பட்டங்களைப் பெற்ற, நீங்களும் ''எங்கள் போதகர் இது, அது மற்றதாய் இருக்கிறார்'' என்று கூறுவதற்கு அவை ஏதுவாயுள்ளன. ஆனால் ஒரு ஆப்பிரிக்க பழங்குடியினனுக்கு எப்படி எகிப்திய இரவைக் குறித்து தெரியாதோ, அதேவிதமாக அவருக்கு தேவனைக் குறித்து ஒன்றும் தெரியாமலிருக்கலாம். ஏதோ ஒரு வேதக் கல்லூரியில் வேத சாஸ்திரம் படித்து பெற்ற அனுபவமே தவிர, தேவனைக் குறித்து அவர் ஒன்றும் அறிந்திருக்கவில்லை. நவீன சபையும் அவர்களுடைய வேத சாஸ்திர வர்ணமும் 'ரிக்கி'யைப் போன்ற ஒரு போதகரைப் பெற்று அவர்களுடைய ஸ்திரீகள் அனைவரும் தங்கள் மகிமையைப் போக்கிக் கொள்கின்றனர். யேசபேலைப் போல் யாராகிலும் இருந்தால், அது அவர்களே - கத்தரிக்கப்பட்ட தலைமயிர், குட்டை கால்சட்டை, முகவர்ணம், எல்லாமே வேத சாஸ்திர பாணியில் அமைந்துள்ளது. சபை அப்படித்தான் இன்றுள்ளது. அது உண்மை. அவளுடைய ஆவிக்குரிய பண்பு, இயேசு கிறிஸ்து வந்து பெற்றுக் கொள்ளவிருக்கும் வீட்டை பேணிப் பாதுகாக்கும் மணவாட்டியின் பண்புக்கு அதிக தூரம் உள்ளது. 61எந்த கிறிஸ்தவனும் அப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்தால், அவன் கிருபையிலிருந்து விழுந்துவிட்டான். என்பதை அது காண்பிக்கிறது. அவன் தேவனைக் குறித்து கொண்டுள்ள ருசியும், ஒரு குடும்பம் எப்படியிருக்க வேண்டுமென்று அவன் கொண்டுள்ள ருசியும், அப்படிப்பட்ட ஒரு பெண்ணை மனைவியாகக் கொள்வதனால் வித்தியாசமாயுள்ளது. இல்லை ஐயா. அவள் உண்மையாக கிறிஸ்தவ ருசியுடனே பொருந்தமாட்டாள். அவளுடைய ஆவிக்குரிய பண்பு மிகவும் தாழ்ந்த நிலையில் உண்டாயிருக்கும். அவள் ஸ்தாபன அழகும், உலக இச்சையும் கொண்டவளாய் மரித்த நிலையில் இருக்கிறாள். இன்று சபை அந்நிலையில் தான் உள்ளது. அவள் தேவனுடைய சபை என்னும் நிலையில் தேவனுடைய வார்த்தையில் நிலை நின்று, பரிசுத்த ஆவி அவள் மத்தியில் கிரியை செய்து, தேவனுடைய வார்த்தையுடன் அந்த சரீரத்தில் ஒன்றாக இணைக்கப்பட அவளுக்கு உரிமையிருந்த போது, வார்த்தை அவளுக்கு அளித்திருந்த அந்த பண்பினின்று விலகி அவள் தன்னை சாத்தானுக்கு - மனிதனால் உண்டாக்கப்பட்ட ஸ்தாபன மார்க்கத்துக்கு விற்றுப்போட்டாள், அவள் ஏசாவைப் போல் தன் பிறப்புரிமையை விற்றுப்போட்டு, அவள் செய்ய விரும்பும் எல்லாவற்றையும் செய்ய அனுமதிக்கும் ஒரு ஸ்தாபனத்தை தெரிந்து கொண்டாள். அது உண்மை. அவளுடைய தாய் ரோமாபுரியிலிருந்த நிசாயாவில் புரிந்த செயல்களினால் பிரபலமான விதமாகவே, அவளும் பிரபலமாக வேண்டுமென்று எண்ணுகிறாள். ஓ, அது எவ்வாறு பெந்தெகொஸ்தே ஆதிக்கத்தில் நுழைந்துவிட்டது! அது மிகவும் மோசமானது. ஆனால் அது நடந்துவிட்டது. 62ஒரு நிமிடம் கவனியுங்கள், கத்தோலிக்க சபையிலுள்ள கன்னியாஸ்திரீயாகி தனது கடைசி திரையை (Last veil) பெற அவள் தன்னை முழுவதுமாக சபைக்கு விற்றுப்போட வேண்டியவளாயிருக்கிறாள். அவளுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் அனைத்துமே சபைக்கு உரிமையாகிவிடுகிறது. அவளுக்கு சுய சிந்தை எதுவுமில்லை. அவள் கடைசி திரையைப் பெற்றுவிட்டால், அவளுக்கு சுய சிந்தை இருக்க முடியாது. அவளுக்கு சுய சிந்தை கிடையாது, சுயசித்தம் கிடையாது. பாருங்கள், சாத்தான் ஒரு போலியை இங்கு ஏற்படுத்தி விட்டான்... உண்மையான கிறிஸ்துவின் சபை (மணவாட்டி) அவருக்கும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள அவருடைய வார்த்தைக்கும் தன்னை முழுவதுமாக விற்றுப் போடுவதனால், கிறிஸ்துவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கிறது. என்ன ஒரு வித்தியாசம்! இன்றைய நவீன சபையை நவீன உலகப்பிரகாரமான சபையை நாம் காண்கிறோம். நவீன உலகப் பிரகாரமான சபை ஆவிக்குரிய சபை இவ்விரண்டும். கர்ப்பந்தரித்து குமாரர்களைப் பிறப்பிக்க வேண்டும். அவைகளில் ஒன்று- ஸ்தாபன சபை - இந்நாட்களில் ஒன்றில் உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தில் பிரசவிக்கும். அது உலகத்திற்கு ஸ்தாபன சபைகளின் மூலம் அந்திக் கிறிஸ்துவை அளிக்கும். அது முற்றிலும் உண்மை. அதைக் காண ஒருக்கால் நான் உயிரோடு இருக்கமாட்டேன். நான் உயிரோடு இருப்பேன் என்று நம்புகிறேன். ஆனால் வாலிபராகிய நீங்கள், ஒரு ஊழியக்காரர் இவ்வாறு கூறினதைக் கேட்டீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அது கடைசியாக மிருகத்தின் முத்திரையில் முடிவு பெறும். அவள் உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தை உருவாக்கும் போது, அவளுடைய மகனை - அந்திக் கிறிஸ்துவை - பெற்றெடுப்பாள். 63மற்றது தேவனுடைய வார்த்தையினால் கர்ப்பந்தரிக்கப்பட்டு சரீரத்தை - இயேசு கிறிஸ்துவின் பூரணப்பட்ட சரீரமாகிய மணவாட்டியை - பெற்றெடுக்கும், கிறிஸ்துவின் சரீரம் இன்னும் பூரணமாகவில்லை. அது எத்தனை பேருக்கு தெரியும்? மனிதனும் ஸ்திரீயும் ஒருவராயிருக்கின்றனர். கிறிஸ்து ஒரே சரீரமாயிருக்கிறார். வார்த்தையாக. இவர்களிருவரும் ஒன்றாக இணைந்து, ஆதாம் தொடக்கத்தில் இருந்தது போல், ஒரே சரீரத்தை உருவாக்குகின்றனர். மனிதனும் ஸ்திரீயும் ஒருவராயிருக்கின்றனர். உண்மையான மணவாட்டி தன்னை முழுவதுமாக அவருக்கு விற்றுப் போட்டதன் விளைவாக, அவளுடைய சொந்த சிந்தையை உபயோகிப்பதில்லை. அவருடைய சிந்தைதான் அவளுடைய சித்தம். அவளுடைய சித்தம் அவருடைய வார்த்தை. 64மனிதனால் தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியை பார்த்து, இன்றைய இயற்கையை ஆவிக்குரியதுடன் ஒப்பிடுங்கள். நவீன யேசபேல், அவள் ஆகாபினால் வஞ்சிக்கப்பட்டு, ''மாக்ஸ் ஃபாக்டர்“ அழகு சாதனங்கள் போன்ற எல்லாமே. சபையைப் பாருங்கள், அதே விதமாக உள்ளது. ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைக்கு அவள் வேசியாக இருக்கிறாள் - பெரிய ஸ்தாபனங்கள், பெரிய கட்டிடங்கள், நிறைய பணம், அதிக சம்பளம், எல்லாமே விற்றுப் போட்ட நிலை. மனிதர்கள் பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு, ஜனங்கள் செய்வதெல்லாம் சரியே என்று ஆமோதித்து அவர்களை அனுமதிக்கின்றனர். வெறும் ஏமாற்றம், அவ்வளவு தான். வேதம் கூறினவிதமாக, உண்மையாகவே இது குருடாயுள்ள லவோதிக்கேயா சபையின் காலம். அவள், ''நான் ஐசுவரியமுள்ளவள், நான் ராணி, எனக்கு ஒரு குறைவுமில்லை'' என்று சொல்லிக் கொள்கிறாள். நீ தரித்திரன், நிர்ப்பாக்கியமுள்ளவன், குருடன், பரிதபிக்கப்படத்தக்கவன், நிர்வாணி என்பதை அறியாமலிருக்கிறாய். அது வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள ''கர்த்தர் உரைக்கிறதாவது“ என்று இல்லாமாலிருந்தால், நான் அதை படிக்கவேயில்லை. அவள் அவ்வாறு தான் இருக்கிறாள், ஆனால் அதை அறியாமலிருக்கிறாள். சற்று யோசித்து பாருங்கள்! 65நிர்வாணமாய் வீதியில் நடந்து செல்லும் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ நீங்கள் பார்த்து, அவர்கள் நிர்வாணமாயுள்ளனர் என்று அவர்களிடம் கூறினால், அவர்கள் ''உன் வேலையை பார்த்துக்கொண்டு போ'' என்று சொல்வார்களானால் அவர்களுக்கு ஏதோ மூளைக் கோளாறு உள்ளது என்று அர்த்தம். அவர்களுடைய மூளை எங்கோ பாதிக்கப்பட்டுள்ளது. ஜனங்கள் என்ன செய்ய வேண்டுமென்று தேவனுடைய வார்த்தை கூறுவதை நீங்கள் படித்து விட்டு, இன்று நமக்குள்ள பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அவர்கள் கண்ட பின்பும், நீங்கள் பைத்தியக்காரர் என்பது போல் உங்களைப் பார்க்கின்றனர். அவர்கள் மறுபடியும் பிறக்க வேண்டுமென்றும் நீங்கள் அவர்களிடம் கூறினால், அவர்களிடத்தில் சென்று நீங்கள் மறுபடியும் மனந்திரும்ப வேண்டும் வேதாகமத்தை விசுவாசிக்க வேண்டும் என்று சொல்வீர்களானால், 66அவர்கள், ''அது அநேக ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்ட யூதக் கட்டுக்கதை. எங்கள் சபை இந்த முறையைத் தான் அனுசரிக்கிறது'' என்பார்கள் நிர்பாக்கியமுள்ளவர்கள், பரிதபிக்கப்படதக்கவர்கள், குருடர்கள், நிர்வாணிகள், அதை அறியாமல் இருக்கிறார்கள். என்ன ஒரு அவர்கள் அந்த நிலையையடவார்கள் என்று வேதம் கூறுகின்றது. ஒரு உண்மையான தீர்க்கதரிசி அதை எவ்வாறு காணத் தவற முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. அது எல்லாவிடங்களிலும், நமது எல்லா சபைகளிலும் நுழைந்துவிட்டது. அதை பாருங்கள். அது நவீன அமைப்பில் உள்ளது. வெளிப்படுத்தல் 17-ல் கூறப்பட்டுள்ள வேசியும் அவளுடைய குமாரத்திகளும், தரித்திரரும் , குருடர்களும் பரிதபிக்கப்படத்தக்கவர்களுமான ஜனங்களுக்கு, தேவனுடைய வார்த்தைக்கு முரணாயுள்ள அவளுடைய வேத சாஸ்திர உபதேசத்தை அளிக்கின்றனர். அவளுக்குள் ஆண்கள், பெண்கள் ஆத்துமாக்கள் எல்லாவிடங்களிலும் சிக்கிக் கொண்டதை அவர்கள் கண்டனர். ஜனங்களைக் கவர்வதற்குப் பதிலாக... கிறிஸ்து தமது வார்த்தையை உறுதிப்படுத்துகின்றார், அது ஜனங்களைக் கவர்கின்றது. பெரிய ஸ்தாபனங்களும், பெரிய ஆடம்பரமான காரியங்களும் கவரும் ஜனங்களை அவர் கவர்வதில்லை. தேவனுடைய வார்த்தை கிறிஸ்துவின் மணவாட்டியையே கவர்கின்றது. 67இப்பொழுது கவனியுங்கள், சபைகள் எவ்வாறு அழகான அங்கிகளினாலும் அழகாக உடுத்தப்பட்ட பாடல் குழுக்களினாலும் மக்களின் கவனத்தைக் கவர்கின்றது என்பது சிரத்தையாயுள்ளது. தலைமயிர் கத்தரிக்கப்பட்ட ஸ்திரீகள், வர்ணம் தீட்டின முகங்கள். அவர்கள் தேவ தூதர்களைப் போல் இனிமையாகப் பாடமுடியும் என்று மனதில் எண்ணியுள்ளனர் - அவர்கள் பிசாசைப் போல் பொய் சொல்லியும், இரவு முழுவதும் நடனமாடியும்... அதைக் குறித்து ஒன்றுமே சிந்திக்காமலிருக்கின்றனர் - அவர்கள் செய்வது சரியென்று நினைக்கின்றனர். அது அழகாயுள்ளது. ஆனால் அது பொய்யாக செய்யப்பட்டது. அது தேவனுடைய வார்த்தையல்ல. 68உண்மையான மணவாட்டி தேவனுடைய வார்த்தையைக் கைக்கொள்வதன் மூலம் தேவனுடைய கவனத்தைக் கவர்கிறாள். இப்பொழுது கவனியுங்கள். நாம் கிறிஸ்துவை கவனிப்போம். “ஒரு நிமிடம் பொறுங்கள். நீங்கள், பேசிக் கொண்டிருக்கும் இந்த அழகு என்ன?” என்று நீங்கள் கேட்கலாம். இயேசு வந்தபோது நாம் அவரை விரும்பத் தக்க அழகு அவருக்கு இல்லாமலிருந்தது என்று வேதம் ஏசாயா 53:2-ல் உரைக்கிறது. அது சரிதானா? அவருக்கு அழகுமில்லை. செளந்தரியமுமில்லை. இன்று சாத்தான் பெற்றுள்ளது போல், அவர் உலகப் பிரகாரமான அழகுடன் வந்திருந்தால், மக்கள் அவர் பின்னால் ஓடி, இன்றைக்கு அவர்கள் சபைகளை ஏற்றுக் கொள்வது போல் அவரை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் இன்று சாத்தானை ஏற்றுக் கொள்வது போல், அவரை விசுவாசித்து ஏற்றுக் கொண்டிருப்பார்கள். நிச்சயமாக அப்படி செய்திருப்பார்கள். ஆனால் அவர் அப்படிப்பட்ட அழகுடன் வரவில்லை. அவர் எப்பொழுதும் பண்பின் அழகுடன் வருகிறார். கிறிஸ்து அழகுள்ள, பெரிய, பெலமுள்ள, பருமனான மனிதன் அல்ல. தேவன் அப்படிப்பட்ட ஒருவரை தெரிந்து கொள்ளுவதில்லை. 69ஒரு முறை ஒரு தீர்க்கதரிசி, ஒரு ராஜாவின் ஸ்தானத்தில் ஈசாயின் குமாரர்களில் ஒருவனை ராஜாவக்க புறப்பட்டு சென்றது என் ஞாபகத்துக்கு வருகிறது. ஈசாய் ஒருவனை வெளியே கொண்டு வந்தான். பார்வைக்கு அவன் பெரிய திடகாத்திரமுள்ள வாலிபனாக இருந்தான். தீர்க்கதரிசி, ''கிரீடம் இவன் தலையில் நன்றாயிருக்கும்'' என்று எண்ணினான். அவனுடைய தலையில் எண்ணெய் ஊற்றி அபிஷேகிக்க தீர்க்கதரிசி ஆயத்தமான போது, தேவன் அவனைப் புறக்கணித்தார். அவர்கள் எல்லோரையும் அவர் புறக்கணித்து, அவன் கடைசியாக சிறு உருவம் கொண்ட, தோள் சரிந்த, சிவந்த மேனியுடைய பையனிடம் வரும் வரைக்கும் காத்திருந்தார். அவன், “கர்த்தர் இவனை ராஜாவாகத் தெரிந்து கொண்டார்'' என்றான். நாம் வெளித்தோற்றத்தைக் கண்டு தெரிந்து கொள்கிறோம். ஆனால் தேவனோ பண்பின் அடிப்படையில் தெரிந்து கொள்கிறார். பண்பு - இயேசு கிறிஸ்துவைப் போல் நற்பண்பு படைத்தவர் யாருமே இல்லை. அது அவருக்குள் ஜீவித்து, அவரை வெளிப்படுத்துகிறது. அது உண்மையென்று நாம் காண்கிறோம். அவருடைய நற்பண்பே கவர்கிறது. இயேசு சபையின் நற்பண்பை தான் எதிர் பார்க்கிறார். அது பெரிய ஸ்தாபனங்களோ, அல்லது கட்டிடங்களோ அதிக அங்கத்தினர்களோ அல்ல. ஆனால் இரண்டு அல்லது மூன்று பேர் எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்களைச் சந்திப்பதாக அவர் வாக்களித்துள்ளார் - உண்மையாக, அதில் தான் உண்மையான விசுவாசி எவனும் தன் நம்பிக்கையை வைத்திருக்கிறான். அவனுடைய நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டு, சத்தியமாயுள்ள தேவனுடைய வார்த்தையின் பேரில் தங்கியுள்ளது, அவர் தமது வார்த்தையின் அடிப்படையில் தான் தெரிந்து கொள்கிறார். உலகத்தை நேசிக்கும் குழுவை அவர் தெரிந்து கொள்வதில்லை. அவர்கள் வார்த்தையை வெறுக்கின்றனர். அவரிடத்திலிருந்து அவள் பிரிந்திருப்பதில் வியப்பொன்றுமில்லை. அவள் அவருடைய வெளிப்பாட்டை இழந்து விட்டாள். அவள் அதை பெற்றிருக்கவில்லை. அவர் அவளுக்காக கவலை கொள்வதில்லை. அவள் நடந்து கொள்ளும் விதமும், உலகப் பிரகாரமானவைகளை அவள் எவ்வளவாகப் பெற்றிருக்கிறாள் என்பதையும் அவர் காணும் போது, 70அவர் அவளில் கிறிஸ்துவின் நற்பண்பை எதிர் பார்க்கிறார். இப்பொழுது சற்று நேரம் பொறுங்கள்; அதுதான் அவருடைய நற்பண்பை பிரதிபலிக்க அவர் ஒரு மணவாட்டியை தெரிந்து கொள்கிறார். இன்றைய நவீன சபைகளோ அவருடைய திட்டத்தை லட்சக்கணக்கான மைல்கள் தொலைவில் இழந்துவிடுகின்றன. ஏனெனில் இது உண்மை என்பதை அவர்கள் மறுதலிக்கின்றனர். அப்படியிருக்க, அது எப்படி முடியும்? மணவாட்டி உருவாகும் நாளை அவர் எதிர் நோக்குகிறார் (எபி. 13:8). அவர் எப்படியிருந்தாரோ, அப்படியே அது அவருடைய அதே மாமிசமும் அதே எலும்புகளும், அதே ஆவியுமாய் இருக்க வேண்டும். எல்லாமே அதுவாக இருந்து கட்டப்பட்டு, பிறகு இருவரும் ஒன்றாகிவிடுகின்றனர். சபை அதுவாக ஆகும் வரைக்கும், அவர்கள் ஒன்றல்ல. அவருடைய பண்பு (இக்காலத்திற்குரிய வார்த்தை வார்ப்பிக்கப் பட வேண்டும்). அவள் அவருடைய சாயலில் வார்ப்பிக்கப் பட வேண்டும். 71முடிக்கும் முன்பு, இவைகளையெல்லாம் நான் கூறினதன் காரணத்தை சொல்லிவிட்டு, முடிந்துவிடுகிறேன். அன்றொரு இரவு, அதிகாலை சுமார் 3.00 மணிக்கு, நான் உறக்கத்தினின்று எழுப்பப்பட்டேன். இதற்கு நீங்கள் யாராகிலும் பதில் கூற விரும்புகிறேன். நான் உங்களிடத்தில் கர்த்தருடைய நாமத்தில் உரைத்த ஏதாவதொன்று, நிறைவேறாமல் இருந்ததுண்டா? அது எப்பொழுதுமே சரியாய் இருந்து வந்துள்ளது. தேவன் எனக்குதவி செய்வராக, அது உண்மையென்று தேவன் அறிவார். இதுவரை கூறப்பட்ட ஆயிரக்கணக்கானவைகளில், உலகின் எந்த பாகத்திலும், ஒரு வார்த்தை கூட அவர் பிசக விட்டதில்லை. அது எப்பொழுதுமே பிழையின்றி நிறைவேறி வந்துள்ளது. அன்றொரு நாள் நான் பீனிக்ஸில் இருந்த போதும் கூட (ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு முன்பு), உங்களிடம் அதைக் குறித்து கூறினேன். “இது என்ன சமயம், ஐயன்மீர்?'' என்னும் செய்தியில், ஏழு தூதர்கள் அங்கு சந்திப்பார்கள் என்றும் அதுவே முத்திரைகள் திறக்கப்படுதலாயிருக்கும் என்றும்... ''லைஃப் பத்திரிக்கை அதைக் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தது. அந்த மகத்தான அக்கினி ஜூவாலை 27 மைல்கள் விட்டம் கொண்டதாய், 30 மைல்கள் உயரத்தில் சென்றது. அது என்னவென்று அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று அவர்கள் கூறினர் - இன்றுவரை அவர்களுக்குத் தெரியாது. இக்கூட்டத்தில் இன்றிரவு உட்கார்ந்து கொண்டிருக்கும் சில மனிதர்கள், அது கூறப்பட்ட விதமாக பிழையின்றி நிகழ்ந்தபோது என்னுடன் கூட இருந்தனர். நடக்கப்போகும் காரியங்களை அவர் எனக்கு முன்னறிவித்தார். அவர் கூறின விதமாகவே அது பிழையின்றி நிகழ்ந்தது. அந்த முத்திரைகள் ஒவ்வொன்றையும் திறந்து சீர்திருத்தக்காரர்களின் காலம் போன்ற காலங்கள் முதற்கொண்டு மறைந்திருந்த இரகசியங்களை என்னிடம் அப்படியே எடுத்துரைத்தார். 72நான் மலையின் மேல் நின்று கொண்டிருந்தேன் - இங்குள்ள மூன்று அல்லது நான்கு பேர் அப்பொழுது என்னுடன் நின்று கொண்டிருந்தனர். ஆம், அதற்கதிகமானவர்கள். நான் மலையின் மேல் ஏறிச்சென்று கொண்டிருந்த போது, “பரிசுத்த ஆவி என்னிடம் அந்த கல்லை கையிலேடு'' என்றார். (நாங்கள் வேட்டையாடிக் கொண்டிருந்தோம்). அவர், ''அதை மேலே எறிந்து, கர்த்தர் உரைக்கிறதாவது என்று சொல்'' என்றார். நான் அப்படியே செய்தேன். அப்பொழுது அங்கிருந்து ஒரு சிறு புனல் (Funnel) வடிவத்தில் காற்று இறங்கி வந்தது. நான், “இன்னும் இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் தேவனுடைய கரத்தைக் காண்பீர்கள்” என்றேன். இப்பொழுது இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் மனிதர் சிலர் என்னுடன் அப்பொழுது இருந்தனர். அடுத்தநாள் காலை 10 மணியளவில் நான் அங்கு நின்று கொண்டு, ''ஆயத்தமாகுங்கள். காரின் அடியில் சென்றுவிடுங்கள். (இராணுவத்தில் பணி புரிந்தவர்) ஏதோ ஒன்று நிகழவிருக்கின்றது“ என்றேன். அப்பொழுது வானம் தெளிவாயிருந்தது. அந்த பெரிய பள்ளத்தாக்கில் சுழலும் அக்கினி மிகுந்த சத்தமிட்டு வானத்திலிருந்து இறங்கி வந்து, பாறையின் சுவர்களைத் தாக்கினது. நான் அதற்கு நேராக கீழே நின்று கொண்டிருந்தேன். நான் தொப்பியைத் கழற்றி தலை வணங்கினேன். அது எனக்கு மேலே மூன்று அல்லது நான்கு அடி உயரம் வரை வந்து, அந்த சுவற்றில் ஒரு பெரிய குழியை இப்படி உண்டாக்கி, வெடித்து, மேலே சென்றது. மறுபடியும் அது சுழன்று கீழே வந்தது. இப்படியாக மூன்று முறை நிகழ்ந்தது. அது 200 கெஜம் தூரம் வரைக்கும் அங்கிருந்த புல் புதர்களின் பாகத்தை வெட்டி வீழ்த்தினது. அவர்கள் ”ஆமென்“ என்று சொல்வதைக் கேட்டீர்களா? இது நடந்த போது, அவர்கள் என்னுடன் கூட இருந்தனர். பாருங்கள். அது மூன்று முறை வெடித்தது. 73அவர்கள் காரின் அடியிலிருந்து வெளியே வந்து என்னிடம் வந்த போது, நான், ''அது மாத்திரம் உங்களை தாக்கியிருந்தால், உங்களில் ஒன்றும் மீதம் இருந்திருக்காது'' என்றேன். நான் “அது... அது அவர் அவர் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்'' என்றேன். தேவன் சுழல் காற்றின் மூலம் பேசுகின்றார், பாருங்கள். அங்குள்ள படத்தில் நீங்கள் காணும் அதே அக்கினி ஸ்தம்பம் தான் அங்கு இறங்கி வந்தது. அது மேலே சென்ற போது அவர்கள், ''இது என்ன?'' என்று கேட்டனர். நான், ''நியாயத்தீர்ப்பு மேற்கு கரையைத் தாக்குகிறது'' என்றேன். அதிலிருந்து இரண்டு நாள், அலாஸ்கா தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும். பாருங்கள், அது முதன் முறையாகத் தாக்கினபோது - அந்த முதல் தாக்குதல்... அதற்கு அடையாளமாக நீங்கள் ஏதாவதொன்றைச் செய்ய வேண்டும். ஒருவன் கலசத்தில் உப்பைப் போட்டு தண்ணீரில் எறிந்து, “கர்த்தர் உரைக்கிறதாவது, நல்ல தண்ணீர் உண்டாகக்கடவது'' என்று கூறினது போல். வேறொருவர், இயேசு தண்ணீரை மொண்டு கற்சாடிகளில் ஊற்றி அதிலிருந்து திராட்சரசம் உண்டாக்கினது போல். அதற்கு அடையாளமாக நீங்கள் ஏதாவதொன்றை செய்ய வேண்டும். ஆகவே தான் ஒரு கல் மேலே எறியப்பட்டு கீழே இறங்கி வர வேண்டியதாயிருந்தது. அது அந்த சுழல் காற்றை துவக்கினது. இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் அது அந்த மலையை அசைத்து அதில் ஒரு முகடை (ridge) வெட்டினது. 74இங்கு அமர்ந்து கொண்டு என்னையே பார்த்து கொண்டிருக்கும் சங்கை பிளேர் அப்பொழுது அங்கிருந்தார். அவர் தகர்த்தெறியப்பட்ட பாறைத் துண்டுகள் சிலவற்றைப் பொறுக்கினார். இங்கு டெர்ரி சாத்மன் இருக்கிறார். அவரும் அங்கிருந்தார். மற்றும் பில்லி பாலும், சகோதரன்... அது பாறையப் பிளந்த போது இங்கு உட்கார்ந்திருக்கும் இன்னும் அநேகர் அதை கண்டனர். இது கற்பனை கதையல்ல, உண்மையாகவே நிகழ்ந்த சம்பவம். பாருங்கள். அதே தேவன் என்னிடம் இவைகளை காண்பித்தார். அது ஒரு எழுத்தும் கூட தவறாமல் அப்படியே நிறைவேறினது. ஒருமுறை கூட அவை தவறினதில்லை. இப்பொழுது நான் அவைகளைக் குறித்து பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறேன் (bragging). 75சில வாரங்களுக்கு முன்பு ஒரு தரிசனம் கண்டேன். நான் உயர்ந்த இடத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது சபையின் மாதிரிக் காட்சியை (Preview) காண்பதற்காக அழைக்கப்பட்டேன். அப்பொழுது நான் கவனித்தேன். என்னுடைய நான் இந்த பக்கம், மேற்கை நோக்கினவாறு நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது இந்த பக்கத்தில், அழகான ஒரு பெண் கூட்டம் - நன்றாக உடுத்தி, நீண்ட தலை மயிரை பின்பக்கம் கொண்டையிட்டு கொண்டு நீண்ட கை ஆடையணிந்து, பாவாடை முழங்கால் வரைக்கும் தொங்கிக் கொண்டு “யுத்தம் செய்வோம் வாரும், கிறிஸ்துவீரரே, இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே'' என்னும் பாடலைப் போன்ற ஒரு பாடலின் இசைக்கு ஏற்றாற் போல் காலடிவைத்து, அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். நான் அங்கு நின்று கொண்டிருந்தேன். அவர்கள் கடந்து சென்றனர். அதில் ஏதோ ஒன்றிருந்தது, ஏதோ ஒரு ஆவி தேவன். அவர் என்னிடம், ''அது தான் மணவாட்டி“ என்றார். நான் அவர்களைப் பார்த்தேன். என் இருதயம் மகிழ்ந்தது. அவள் இந்த பக்கம் வந்து, என் பின்னால் கடந்து சென்றாள். அவள் அந்த பக்கம் சென்று சற்றுநேரம் கழிந்தவுடன் அந்த சத்தம், “இப்பொழுது நவீன சபை காட்சிக்கு வரப்போகின்றது” என்றது. அங்கு ஆசிய சபை வந்தது. அப்படிப்பட்ட மோசமான கூட்டத்தை நான் கண்டதில்லை. பல்வேறு நாடுகளின் சபைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. அவர்களைக் காண்பதற்கு பயங்கரமாக இருந்தது. 76இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால் தேவனுக்கு முன்பாக சத்தியத்தை உரைக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவர், “இப்பொழுது அமெரிக்க சபை காட்சிக்கு வரப்போகிறது'' என்று சொன்னார். நான் அப்பொழுதாகிலும் பிசாசின் கூட்டத்தைக் கண்டிருந்தால், அது அது தான். அந்த பெண்கள் நிர்வாணமாய், யானை தோல் நிறம் போன்ற சாம்பல் நிறம் கொண்ட ஒன்றை அவர்களுக்கு முன்பாக பிடித்திருந்தனர். மேல் பாகத்தில் ஒன்றுமேயில்லை. அவர்கள் இந்த வாலிபப் பிள்ளைகள் ஆடும் டுவிஸ்ட் (Twist) நடனம் ஆடிக்கொண்டு வந்தனர். அந்த நடனத்திற்கு ஏற்றாற்போல் அந்த விதமான இசை. நான் குமாரி அமெரிக்க ஐக்கிய நாடுகளைக் கண்டுவிட்ட உடனே (Miss U.S.A) ஏறக்குறைய மயக்கமடைந்துவிட்டேன். இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாயுள்ளது. நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால், இப்பொழுது என்னை நம்புங்கள். உலகிலுள்ள எதற்காகவும் நான் பொய் சொல்லமாட்டேன். அது உண்மையாயிராவிடில், அதை என்னை கூற வைப்பதற்கு உலகில் போதிய பணம் கிடையாது. அவள் வந்த போது, என் வாழ்க்கையில் நான் கண்டிராத மிகவும் கேவலமான காரியமாக இது இருந்தது. நான் “தேவனே, போதகர்களும், சகோதர்களாகிய நாங்களும் உமக்கு ஒரு மணவாட்டியைக் கொள்ள மிகவும் கடினமாக உழைத்த போதிலும், இதை தான் எங்களால் செய்ய முடிந்தது” என்று நினைத்துக் கொண்டேன். அவள் உடலை நெறித்து, ஹலா பாவாடை போன்ற ஒன்றை தனக்கு முன்னாலுள்ள பாகத்துக்கு நேராக பிடித்துக் கொண்டு, இந்த வாலிபப் பிள்ளைகள் ஆபாசமான நடனக் காட்சிகளில் உடலை நெளித்து ஆடுவது போல் அவளுடைய கீழ்பாகத்தை அவள் நெளித்து நடனமாடிச் சென்றாள். அது தான் அமெரிக்காவின் குமாரி கிறிஸ்தவ மார்க்கம். 77எனவே, தேவன் உதவி செய்வாராக. அவருடைய பார்வைக்கு அது அப்படித்தான் காணப்படுகிறது. நான்... நான் மயங்கி விழுந்திருப்பேன். இதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள், செய்யப்பட்ட பிரசங்கங்கள், இணங்க வைக்க எடுத்துக் கொண்ட பிரயாசங்கள் அனைத்தையும் நான் எண்ணிப் பார்த்தேன். அவர்கள் ஒவ்வொருவரும் தலைமயிரை கத்தரித்துக் கொண்டு, முன்னால் இதை பிடித்துக் கொண்டிருந்தனர். இயற்கைக்கு மேம்பட்டவருடன் நான் நின்று கொண்டிருந்த இடத்தை அவர்கள் அடைந்தனர். அவரை என்னால் காணமுடியவில்லை, அவர் பேசுவதை என்னால் கேட்க முடிந்தது. அவர் என்னுடன் இருந்தார். அவர்கள் இந்த பக்கம் திரும்பின போது, அவர்கள்... உடலை நெளித்தும், சிரித்துக்கொண்டும், அதை முன்னால் பிடித்து கொண்டு சென்றனர். அங்கு அவருடைய பிரசன்னத்தில் நின்று கொண்டிருந்த அவருடைய ஊழியக்காரனாகிய நான் எவ்வளவு முயன்றும் கூட அவ்வளவு தான் என்னால் சாதிக்க முடிந்தது. நான் “தேவனே இதனால் எனக்கு என்ன நன்மை? இது என்ன நன்மை செய்தது? எல்லா அழுகையும், கெஞ்சலும், இணங்க வைக்க எடுத்துக் கொண்ட முயற்சியும், நீர் காண்பித்த மகத்தான அடையாளங்களும். நான் அங்கு நின்று பிரசங்கம் செய்த பிறகு, வீட்டுக்குச் சென்று அழுது முறையிடுவேன். இதனால் என்ன பயன்? இவையெல்லாவற்றிற்கும் பிறகு, இப்படிப்பட்ட ஒரு மணவாட்டியை உமக்கு நான் சமர்ப்பிக்கிறேனே'' என்று நினைத்தேன். 78நான் அங்கு நின்று பார்த்துக் கொண்டிருந்த போது, அவள் கடந்து சென்றாள். அது எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அவளுடைய பின்பாகத்தில் ஒன்றுமேயில்லை. அதை அவள் முன்னால் மாத்திரம் பிடித்துக் கொண்டு, இந்த டுவிஸ்ட் இசைக்கு உடலை நெளித்து, கையை மேலே இப்படி உயர்த்தி, நடந்து சென்றாள்... ஓ, அது ஆபாசமான ஒரு காட்சி அவள் உடலை இப்படி அசைத்துக் கொண்டு சென்றது. நீங்கள், “சகோ. பிரான்ஹாமே, அதன் அர்த்தம் என்ன?'' என்று கேட்கலாம். எனக்குத் தெரியாது. நான் கண்டதை உங்களுக்கு அறிவிக்கிறேன். அவள் கடந்து சென்ற போது, அவளை நான் பார்த்தேன். ஓ, நான் மயங்கிவிட்டேன். நான், ''தேவனே, நான் குற்றவாளி. நான் முயன்று பயனில்லை... நான் விலகிவிடுகிறேன்“ என்று மனதில் எண்ணினேன். திருமதி கார்ல் வில்லியம்ஸ், நீங்கள் இங்கு இருப்பீர்களானால், சில நாட்களுக்கு முன்பு நீங்கள் என்னிடம் கூறின அந்த சொப்பனம். அன்றொரு இரவு நீங்கள் அதை கண்டு, அது உங்களைத் தொல்லைப்படுத்தினதே! அதுதான். வாகனத்தை திருப்பும் சக்கரம் (Steering Wheel) என் கையிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது. 79அதை மறந்துவிடலாமென்று முடிவு செய்தேன், அப்பொழுது திடீரென்று அவர்கள் மறுபடியும் வரும் சத்தத்தைக் கேட்டேன். இந்த வழியாக சென்ற அதே மணவாட்டி திரும்பவும் இந்த பக்கம் வந்தாள். அந்த சிறு கனம் பொருந்திய ஸ்திரீகள் மறுபடியும் வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தேசத்தின் உடையை உடுத்தியிருந்தனர். சுவிட்சார்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள். அவர்கள் தங்கள் தேசத்தின் ஆடையை அணிந்தவர்களாய், நீண்ட கூந்தலைக் கொண்டவர்களாய். முதலில் வந்த கூட்டத்தினரைப் போலவே இருந்தனர். அவர்கள், “யுத்தம் செய்வோம் வாரும், கிறிஸ்து வீரரே'' என்னும் பாடலுக்கு காலடி எடுத்து வைத்து நடந்து வந்தனர். நாங்கள் நின்று கொண்டிருந்த மேடையை அவர்கள் கடந்து சென்றவுடனே, எல்லோருடைய கண்களும் அவர்களையே நோக்கிக் கொண்டிருந்தன. அவர்கள் திரும்பி, அணிவகுத்து சென்றனர். இவர்கள் வானத்திற்கு ஏறிச் செல்லத் தொடங்கின போது மற்ற கூட்டத்தார், ஒரு செங்குத்தான மலையின் ஓரத்தை அடைந்து, கீழே சென்றனர். அவர்கள் வானம் வரைக்கும் அணி வகுத்து சென்றனர். அவள் இவ்வாறு அணிவகுத்து சென்று கொண்டிருந்த போது, பின்னாலிருந்த சில சிறு பெண்கள் (அவர்கள் வெளிநாட்டு பெண்களைப் போல காணப்பட்டனர் - ஸ்வீடன் அல்லது சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் போன்று. அல்லது வேறெங்கோ) சுற்றும் முற்றும் பார்த்து அணியை விட்டு வெளியே வந்தனர். நான் ''அப்படி செய்யாதீர்கள்! அணியை விட்டு வெளியே வராதீர்கள்'' என்று கூச்சலிட்டேன். அப்படி கூச்சலிட்ட போது, என் தரிசனம் கலைந்து, என் கையை இப்படி உயர்த்தினவாறு நின்று கொண்டிருந்தேன். நான், ''நல்லது...'' என்று நினைத்தேன். 80இன்றிரவு நான் கூறினவைகளுக்கு காரணம் இதுவே உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நாம் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகி விட்டதா? அவள் ஏற்கனவே அழைக்கப்பட்டு, தெரிந்துகொள்ளப்பட்டு, முத்தரிக்கப்பட்டுவிட்டாளா? ஒருவர் கூட அதிகமாக இருக்க முடியாதென்று உங்களுக்குத் தெரியும் அப்படியிருக்கக் கூடுமா? ஓ, ஆமாம். ஓ ஆமாம். காலை உணவின் போது நான் என்ன கூறினேன் என்று நினைவிருக்கிறதா? ஆண் பெண் உடலுறவின் போது லட்சக்கணக்கான கிருமிகள் வெளிவருகின்றன. லட்சக்கணக்கான முட்டைகள் புறப்பட்டு வருகின்றன, ஆனால் அவைகளில் ஒன்று மாத்திரமே ஜீவிக்கிறது. ஆயினும் அவையெல்லாம் ஒரே போல் உள்ளன - லட்சங்களில் ஒன்று. எல்லாமே அதே முட்டை தான், எல்லாமே அதே போன்ற கிருமிகள் தான். ஆனால் அவைகளில் ஒன்று மாத்திரமே ஜீவிக்கிறது. மற்றவையனைத்தும் சாகின்றன. எது முதிர்ந்த முட்டையென்று, அது என்னவென்று யாரும் சொல்ல முடியாது, தேவனே அதை தீர்மானிக்க வேண்டும். அது பையனோ, பெண்ணோ, வெள்ளை தலை மயிர் கொண்டதோ என்பதை தேவனே தீர்மானிக்கிறார். முதலாவது வருவது இணைவதில்லை. தேவன் எதை முதலாவதாக தீர்மானிக்கிறாரோ, அதுதான் இணைகின்றது. ஒருக்கால் ஒன்று இங்கு வரலாம், ஒன்று... அவை இணைவதை நீங்கள் சோதனை குழாயில் (test tube) கண்டால் - அதை நான் கண்டிருக்கிறேன். தேவனே அதை தீர்மானிக்க வேண்டும். எல்லாமே ஒரே போல் உள்ளன - ஆனால் தெரிந்து கொள்ளப்படுதலின் மூலம், இயற்கை பிறப்பு - ஆனால் தெரிந்து கொள்ளப்படுதலின் அடிப்படையில் நிகழ்கின்றது பிறப்பு தேவன் லட்சக்கணக்கானவைகளில் ஒன்றை தெரிந்துகொள்கிறார். 81இஸ்ரவேலர் எகிப்தை விட்டு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு பிரயாணம் செய்த போது, ஏறக்குறைய இருபது லட்சம் பேர் இருந்தனர் எல்லோரும் பலி செலுத்தப்பட்ட ஆட்டுக் குட்டியின் இரத்தத்தின் கீழ் இருந்தனர். இல்லையென்றால் அவர்கள் உயிரோடிருக்க முடியாது. அவர்கள் ஒவ்வொருவரும் தீர்க்கதரிசியாகிய மோசேக்கு செவி கொடுத்தனர். அவர்கள் எல்லோரும் மோசேக்குள்ளாக சிவந்த சமுத்திரத்தில் ஞானஸ்நானம் பெற்றனர். எல்லோரும் நடனமாடினர். தேவன் சத்துருக்களை நிர்மூலமாக்கின போது, பெண்கள் அனைவரும் மிரியாமுடன் கூட சமுத்திரக் கரையில் நடனமாடினர். எல்லோரும் மோசேயுடன் நின்று, அவன் ஆவியில் பாடுவதைக் கேட்டனர். அவர்கள் எல்லோரும் வானத்திலிருந்து விழுந்த மன்னாவை வனாந்திரத்தில் புசித்தனர். ஒவ்வொரு இரவும் புதிய மன்னா வானத்திலிருந்து விழுந்தது. அது செய்திக்கு அடையாளமாயிருந்தது. அவர்கள் எல்லோரும் அதை புசித்தனர். ஆனால் இருபது லட்சம் பேர்களில், எத்தனை பேர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைந்தனர்? இரண்டு பேர் மாத்திரமே பத்து லட்சம் பேருக்கு ஒருவர்! கத்தோலிக்கர்களையும் கணக்கிட்டால், இன்று உலகில் ஏறக்குறைய 50 கோடி கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். விசுவாசிகள் என்று இவ்வுலகில் அழைக்கப்படுபவர்கள். இன்றிரவு எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழுமானால், பத்து லட்சத்துக்கு ஒருவர் என்னும் கணக்குப்படி (அப்படித்தான் இருக்கும் என்று நான் கூறவில்லை அப்படி இருந்தது), அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் 500 பேர் காணாமற்போவார்கள். அதைக் குறித்து நீங்கள் கேள்விப்படவும் மாட்டீர்கள். ஆயினும் அத்தனை பேர் காணாமற் போவார்கள். அவர்களை எண்ணிக் கூட பார்க்க முடியாது. 82நண்பர்களே, யோவான் ஸ்நானன் இருந்த போது நடந்து விதமாக நமக்கும் நேரிடலாம். சீஷர்களும் கூட. “எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்படுத்த வேண்டுமென்று அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் வேதாகமத்தில் சொல்லியிருக்கின்றனரே'' என்று கேட்டனர். அதற்கு, “அவர் எலியா வந்தாயிற்று நீங்கள் அதை அறியவில்லை என்று உங்களுக்கு சொல்லுகிறேன்'' என்றார் (மத் 17: 10,12). இந்நாட்களில் ஒன்றில், நாம் இங்கு விடப்பட்டு உட்கார்ந்து கொண்டிருப்போம். ''உபத்திரவ காலத்திற்கு முன்பு நடக்க வேண்டிய எடுத்துக் கொள்ளப்படுதல் என்னவாயிற்று?'' அது ஏற்கெனவே நடந்துவிட்டது, ”நீங்கள் அதை அறியவில்லை''. 83சரீரம் முத்தரிக்கப்பட்டுவிட்டது - அதை அணிக்குள் வைத்து, அது அப்படித்தான் என்று நான் கூறவில்லை. அது அப்படியில்லை என்று நம்புகிறேன். ஆனால் நண்பனே... இன்றிரவு நமது இருதயத்தில், நாம் புரியும் செயல்களைக் கைவிட்டு, நமது ஜீவியத்தை சரிப்படுத்திக் கொள்ள வேண்டுமெனும் எண்ணம் தோன்றினால், உங்கள் ஊழியக்கார சகோதரன் என்னும் முறையில் உங்களுக்கு ஆலோசனை கூற விரும்புகிறேன். பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு இதை முதன் முறையாக கூறுகிறேன். பொது மக்களின் முன்னிலையில் எங்காவது, எதைக் குறித்தாவது அதிக நேரம் பேசினேன் என்றால், இன்றிரவு இந்த பொருளைக் குறித்து தான். ஏனெனில் இந்த கூட்டங்களில் எனக்கு அதிக சுதந்திரம் உண்டு. நான் தேவனுடைய தீர்க்கதரிசியென்று நீங்கள் நம்பினால், நான் உங்களிடம் கூறினதற்கு செவி கொடுங்கள். உங்கள் இருயத்தில் சிறிது உணர்ச்சி ஏற்பட்டாலும், உடனே தேவனிடம் சொல்லுங்கள். அதை செய்யுங்கள். 84மனிதனே, ஒரு நிமிடம் நில். நீ சேவிக்கும் உன் ஸ்தாபனக் கோட்பாடுகளைப் பார். உங்கள் சபைகளைப் பாருங்கள். அவை தேவனுடைய வார்த்தையின்படி உள்ளனவா? ''நீங்கள் ஒவ்வொரு தகுதியையும் பெற்றிருக்கிறீர்களா?'' ''நான் நல்லவன்'' என்று நீங்கள் கூறலாம். நிக்கோதேமுவும் கூட நல்லவன் தான். அப்படியே மற்றவர்களும் இருந்தனர். அவர்கள் நல்லவர்கள்... பாருங்கள், அதற்கும் இதற்கும் சம்பந்தமுமில்லை . ஸ்திரீகளே, நீங்கள் நிலைக் கண்ணாடியில் உங்களைப் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஒரு ஸ்திரீ என்ன செய்ய வேண்டுமென்று தேவன் கூறியுள்ளார் என்பதை அறிந்து தேவனுடைய நிலைக் கண்ணாடியில் உங்களைப் பாருங்கள். சபை நிலைக் கண்ணாடியில் அல்ல, தேவனுடைய நிலைக் கண்ணாடியில் உங்களை நோக்கி, இயேசு கிறிஸ்துவின் ஆவிக்குரிய மண்வாட்டியாக இருக்க உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தகுதி பெற்றிருக்கிறீர்களா என்பதை அறிந்து கொள்ளுங்கள். போதகர்களே, நீங்களும் அப்படியே சிந்தியுங்கள். ஒருவர் மனதைப் புண்படுத்தக் கூடாதென்று, இங்கு தர்மசங்கடமான நிலையில் இருக்கிறீர்களா? அவர்கள் உங்கள் சபையினின்று புறம்பாக்கினாலும், இதை செய்ய தயாராயிருப்பீர்களா? அப்படிப்பட்ட ஒரு உணர்வு உங்களுக்கு இருக்குமானால், என் அருமை சகோதரனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உன்னை எச்சரிக்கிறேன், அதை விட்டு உடனே வெளியே வா. ஸ்திரீயே, ஒரு கிறிஸ்தவள் பெறவேண்டிய தகுதியை நீ பெறாமலிருந்தால் - பெயர் கிறிஸ்தவளாக அல்ல, தேவனுடைய விவாக சான்றிதழ் (Marriage Certificate) நீ எப்படி இருக்க வேண்டுமென்று கூறுகின்றதோ, அவ்வாறே உன் இருதயத்திலும் உன் வாழ்க்கையிலும் நீ இருக்க வேண்டும். சபை அங்கத்தினனே, தேவனுடைய வார்த்தை உரைத்துள்ள தகுதிகளை உன் சபை பெற்றிராவிடில், அதை விட்டு வெளியே வந்து, கிறிஸ்துவுக்குள் நுழைந்து கொள். 85இது பயபக்தியான எச்சரிக்கை. இது எந்த நேரம் என்று நமக்குத் தெரியாது. இந்த பட்டினம் எந்த நேரத்தில் சமுத்திரத்தின் அடியில் மூழ்கப் போகிறதென்று உனக்குத் தெரியாது. இயேசு, ''ஓ, வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர் நகூமே, நீ பாதாள பரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலும் கொமோராவிலும் செய்யப்பட்டிருந்ததானால், அவை இந்த நாள் வரைக்கும் நிலைத்திருக்கும்'' என்றார். (மத் 11:23). சோதோமும் கொமோராவும் உப்புக் கடலின் (Dead sea) அடியில் மூழ்கிவிட்டன. கப்பர்நகூமும் கடலின் அடியில் மூழ்கிவிட்டது. தேவ தூதர்களின் (Angels) பட்டினம் என்று உரிமை கொண்டாடும் பட்டினமே (சகோ. பிரான்ஹாம் லாஸ் ஏஞ்சலிஸை குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்), நீ உன்னை வானபரியந்தம் உயர்த்தி ஆபாசமான நாகரீத்தை உலகிற்கு அனுப்பி, வெளிநாடுகளும் கூட இங்கு வந்து நமது ஆபாசத்தை ஏற்றுக் கொண்டு அதை வெளியில் அனுப்புகின்றன. நீ அழகான ஆலயங்கள், கூர்கோபுரங்கள் போன்றவைகளைக் கொண்டிருக்கிறாய். நீ புரியும் செயல்கள் ஒரு நாளில் நீ இந்த கடலில் அடியில் மூழ்கிவிடுவாய் என்பதை ஞாபகம் கொள். அந்த பெரிய தேன்கூடு இப்பொழுதே உன் அடியில் உள்ளது. தேவனுடைய கோபாக்கினை உனக்குக் கீழே கக்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் எவ்வளவு காலம்தான் அவர் அந்த மணல் தடையை (sand bar) பிடித்து வைத்திருப்பார்? ஒரு மைல் ஆழமுள்ள அந்த சமுத்திரம் கடந்து வந்து, சால்டன் கடலில் (Salton Sea) தள்ளவிடும். பாம்பே (Pompeii) பட்டினத்தின் கடைசி நாட்களைக் காட்டிலும் இது பயங்கரமானதாக இருக்கும். லாஸ் ஆஞ்சலிலே, மனந்திரும்பு! மற்றவர்களாகிய நீங்களும் மனந்திரும்பி, தேவனிடத்திற்கு திரும்புங்கள். கோபாக்கினையின் நேரம் பூமியின் மேல் உள்ளது. சமயம் உள்ள போதே தப்பி ஓடி கிறிஸ்துவுக்குள் வாருங்கள். நாம் ஜெபம் செய்வோம். 86அன்புள்ள தேவனே, என் ஆவி கலங்கி, என் இருதயம் எச்சரிக்கையின் கண்ணீரே சிந்தும் இந்நேரத்தில், ஓ, தேவனே, நான் கூறினதை மனிதரும் ஸ்திரீகளும் கேலியாக எண்ணாமல், ஸ்தாபன மக்கள் நான் அவர்கள் பேரில் கொண்டுள்ள வெறுப்பினால் இவைகளை அவர்களுக்கு விரோதமாக கூறினேன் என்று எண்ணாமலிருப்பார்களாக. கர்த்தாவே, அது அன்பினால் கூறப்பட்டது என்பதை அவர்கள் காண்பார்களாக. சர்வ வல்லமையுள்ள தேவனே, இந்த கரையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் வரைக்கும், ஆண்டிற்கு பின் ஆண்டு, உமது வார்த்தையை நான் அறிவித்து வந்தேன் என்பதற்கு நீர் சாட்சியாயிருக்கிறீர், ஓ, தேவனே அது இன்றிரவு நிகழுமானால் நான் சத்தியத்தை உரைத்தேன் என்பதற்கு சாட்சியாயிரும். மணவாட்டியை குறித்த தரிசனம் உண்மையென்று உமக்குத் தெரியும். ஆண்டவரே, உமது நாமத்தை நான் உபயோகித்து, அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று நான் கூறினேன். நான் செய்கிறது என்னவென்பதை அறிந்திருக்கிறேன் என்று உணருகிறேன். எனவே ஆண்டவரே, ஜனங்கள் இன்றிரவு தங்களை அசைத்துக் கொண்டு, வரப்போகும் கோபாக்கினையின்று தப்பி ஓட வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஏனெனில் இக்கபோத் என்பது வாசல்களிலும் நாடு முழுவதிலும் எழுதப்பட்டுள்ளது. ஒரு கறுப்பு அடையாளம் அதன் மேல் வந்துள்ளது. தேவனுடைய ஆவி துக்கமடைந்து, அதை விட்டு போய்விட்டார். அவர்கள் தராசிலே நிறுத்தப்பட்டு குறைவுள்ளவர்களாக காணப்பட்டார்கள். நெபுகாத்நேச்சார் ராஜாவின் விருந்து, மது அருந்தும் விருந்துடனும், கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அரை நிர்வாணமான பெண்களுடனும் மீண்டும் தோன்றியுள்ளது. 87ஓ, பரலோகத்தின் தேவனே, பாவம் நிறைந்த உலகத்தின் பேரிலும் பாவமுள்ள ஜனங்களின் பேரிலும் இரக்கமாயிரும் கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் அந்நிலையில் தான் இருக்கிறோம். நான் திறப்பின் வாசலில் நின்று தெய்வீக இரக்கத்துக்காக கெஞ்சுகிறேன். இன்றிரவு இக்கூடத்திலுள்ளவர்களிடம் நீர் பேசி, உமது மணவாட்டியின் கவனத்திற்கு இவைகளைக் கொண்டு வந்து, அவர்கள் எந்த கோட்பாடுகளின் அடையாளத்தைக் கொண்டும் அணிவகுத்து செல்லாமல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷதொனிக்கு மாத்திரம் அணி வகுத்து செல்ல அருள்புரிவீராக. ஓ, தேவனே இதை அருள்வீராக. நீ தேவன் என்றும், உமது வார்த்தை சத்தியம் என்றும் இன்றிரவு அறியப்படட்டும் நாங்கள் பயபக்தியுடன் இம்மக்களின் முகங்களை நோக்கி, அவர்களுடைய கவனத்தை உமது வார்த்தைக்கு கொண்டு வருகிறோம். கர்த்தாவே, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் அவர்களுக்காக ஜெபிக்கிறேன். நீர் ஜனங்களின் மத்தியில் அசைவாடி, அவர்களுடைய இருதயத்தில் உள்ளவைகளை அவர்களுக்கு எடுத்துரைப்பதை அவர்கள் கண்டுள்ளனர் என்பதில் யாதொரு ஐயமில்லை. ஆண்டவரே, இப்பொழுது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நீர் அறிவீர். ஓ, தேவனே, அது சத்தியமென்று உமக்குத் தெரியும். ஆண்டவரே, பரிசுத்த ஆவி தாமே மறுபடியுமாக பரிந்து பேசி, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்ட்டுள்ளவர்களாக காணப்படும் இக்கூட்டத்திலுள்ளவர்களை வெளியே இழுக்கும் படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஓ, தேவனே, அதை அருள்வீராக. என் முழு இருதயத்தோடும் இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறேன். ஆண்டவரே இந்த செய்தியை ஆதரிக்க இந்த ஜனங்கள் தங்கள் கடைசி பைசாவையும் கூட கொடுப்பார்கள். அவர்களால் முடிந்த அனைத்தும் அவர்கள் செய்வார்கள். ஆனால் ஓ, தேவனே, இச்செய்தியை ஏற்றுக்கொண்டு இதற்குள்ளாக வரும் விஷயத்தில், தேவனே, இன்றிரவு அவர்களுக்கு பலனளித்து இந்த கன்வென்ஷனில் உமது பரிசுத்த ஆவியை ஊற்ற வேண்டுமாய் ஜெபிக்கிறேன். இங்கு கேளிக்கை அல்லது குதித்தல் இராமல், கதறுலும் அழுகையும் உண்டாகி, இன்றிரவு எங்களுக்கு அடியில் நியாயத்தீர்ப்பு கெர்ச்சித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்து கொண்டு மனந்திரும்புதல் ஏற்படும்படி செய்யும். தேவனே, இதை அருள்வீராக. எனக்குத் தெரிந்தவரை நான் ஊக்கமாக ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். 88என் சகோதரனே, சகோதரியே, இதைக்காட்டிலும் அதிகம் என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. தேவனுடைய வல்லமையினால், உங்கள் கண்களில் எனக்குத் கிருபை கிடைத்திருக்குமானால், நான் அவருடைய தீர்க்கதரிசியென்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால்... பகிரங்கமாக இப்படி கூறுவது இதுவே முதல் தடவை. நான் விசித்திரமான ஒருவகை எச்சரிப்பை உணருகிறேன். இப்படி சாதாரணமாக ஏற்படுவதில்லை. நான் இவ்வாறு நடந்து கொள்வதில்லையென்று உங்களுக்குத் தெரியும். இந்த செய்தியை பிரசங்கித்து இவைகளைக் கூறப் பக்கவாட்டில் ஓடினேன், எல்லாம் செய்தேன், ஆனால் அது கூறப்பட்டாகிவிட்டது. நான் சத்தியத்தை உங்களுக்கு எடுத்துரைத்தேன் என்பதற்கு இது நியாயத்தீர்ப்பின் நாளில் சாட்சியாக நிற்கும் அது கர்த்தர் உரைக்கிறதாவது. ஓ, பெந்தெகொஸ்தே ஸ்தாபனமே, உன் ஜீவன் தப்ப ஓடிப் போ! தாமதமாகும் முன்பு பலி பீடத்தின் கொம்புகளண்டை ஓடிச் சென்று கதறி அழு. ஏனெனில் ஒரு நேரம் வரப் போகின்றது. அப்பொழுது நீ அழுது புரண்டாலும் பயன் ஏதுவுமிராது. ஏசா தன் சிரேஷ்ட புத்திர பாகத்தின் ஸ்தானத்தை வகிக்க முயன்றும், அவனால் முடியவில்லை. ஓ, கலிபோர்னியாவே, உன்னை தேவனிடம் சமர்ப்பிக்கிறேன். ஓ, நான் நேசித்து என் இருதயத்தில் பிணைத்திருக்கும் முழு சுவிசேஷ வர்த்தகர்களின் கன்வென்ஷனே, உங்களை இன்றிரவு இயேசு கிறிஸ்துவினிடம் சமர்ப்பிக்கிறேன். அவரிடம் ஓடிப்போங்கள். இதைக் குறித்து நீங்கள் தணிந்து போகும்படி செய்ய பிசாசை அனுமதிக்காதீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிறையும் வரைக்கும் அதில் நிலைத்திருங்கள். அப்பொழுது அது உங்களை வார்த்தைக்கு கொண்டு வரும், பெண்களாகிய உங்களை அது சீர்படுத்தும், மனிதராகிய உங்களை அது சீர்படுத்தும். உங்களுக்கு பரிசுத்த ஆவி உண்டென்று கூறி, நீங்கள் வார்த்தையை பின்பற்றாமல் போனால், உங்களுக்குள் இருப்பது வேறொரு ஆவி. தேவனுடைய ஆவி அவருடைய வார்த்தையின் மேல் தங்கியுள்ளது. மேசியா - அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தை மணவாட்டி பெண் மேசியாவாக (Messiahette) - அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையாக - இருக்கிறாள். 89கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாம் எழுந்து நிற்போம். என் சத்தத்தை நீங்கள் மறுபடியும் கேட்காமல் போனால், கர்த்தருக்கு சித்தமானால், இன்னும் சில மணி நேரத்தில் நான் ஆப்பிரிக்காவுக்கு கடல் மார்க்கமாக பிரயாணம் செய்யப் போகிறேன். ஒருக்கால் நான் திரும்பி வராமல் இருக்கலாம் எனக்குத் தெரியாது. என் முழு இருதயத்தோடு இதை உங்களிடம் கூறுகிறேன். நான் உங்களிடம் சத்தியத்தை எடுத்துக் கூறினேன். நான் உங்களிடம் எடுத்துரைக்க வேண்டுமென்று தேவன் கட்டளையிட்டதில் நான் ஒன்றையும் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன். அதை கர்த்தரின் நாமத்தில் உரைத்தேன். இது பயபக்தியான நேரம். அதை எப்படி கூறுவதென்றே தெரியவில்லை. மூன்று நான்கு முறை நான் பிரசங்க பீடத்தை விட்டு இறங்க முயற்சித்தேன். என்னால் முடியவில்லை. இது பயபக்தியான நேரம். அதை மறந்து போகவேண்டாம்! ஒருக்கால் இது தேவன் விடுவிக்கும் கடைசி அழைப்பாக இருக்கலாம். எனக்கு தெரியாது... என்றாவது ஒருநாள் அவர் தமது கடைசி அழைப்பை விடுவிக்க வேண்டும். எப்பொழுது? எனக்குத் தெரியாது. ஆனால் உங்களிடம் இதை கூற விரும்புகிறேன். அந்த தரிசனத்தின்படி, மணவாட்டி தெரிந்து கொள்ளப்படுதல் ஏறக்குறைய முடிந்துவிட்டது! பெயர் கிறிஸ்தவ சபை உள்ளே வருவதைப் பாருங்கள். உறங்கிக் கொண்டிருந்த கன்னிகைள் எண்ணெய்க்காக வந்தபோது, அவள் அதைப் பெற்றுக்கொள்ளத் தவறிவிட்டாள். மணவாட்டி உள்ளே சென்றாள். எடுத்துக் கொள்ளப்படுதல் மேலே சென்றது. அவர்கள் எண்ணெய் வாங்க சென்ற போது, மணவாளன் வந்துவிட்டார் நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கிறீர்களா? உறக்கத்தினின்று வேகமாக எழுந்து, உங்கள் சுய நினைவுக்கு வந்து, இந்த நிமிடம் நீங்கள் மரித்துக் கொண்டிருந்ததால் எவ்வளவு ஊக்கமாக ஜெபம் செய்வீர்களோ, அவ்வாறே நாம் ஒவ்வொருவரும் கர்த்தரின் நாமத்தில் ஜெபம் செய்வோம். நாம் ஒவ்வொருவரும் நமது சொந்த வழியில் ஜெபம் செய்வோம். 90சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்கள் மேல் இரங்கும் ஆண்டவரே, என் மேல் இரங்கும். எங்கள் எல்லோர் மேலும் இரக்கமாயிரும். நாங்கள் என்ன செய்தபோதிலும், இந்த காரியங்களில் நாங்கள் தவறினால், அதனால் என்ன பயன்? இந்த மகத்தான பட்டினம் கடலுக்குள் மூழ்கி, தேவனுடைய நியாயத்தீர்ப்பு கரையைத் தாக்கும் முன்பே, ஓ, தேவனே, நான் நின்று கொண்டு இரக்கத்திற்காக கெஞ்சுகிறேன். தேவனே, நீர் மணவாட்டியை அழைக்கும்படியாக ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவர்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். ஆமென்.